2009-08-10 14:20:39

நாத்சி வதைப்போர் முகாம்கள், தீமையின் மற்றும் இப்பூமியில் நரகத்தின் உச்சகட்ட அடையாளங்கள், திருத்தந்தை


ஆக.10,2009 இரண்டாம் உலகப் போரின் போது நடத்தப்பட்ட நாத்சி வதைப்போர் முகாம்கள், தீமையின் மற்றும் இப்பூமியில் நரகத்தின் உச்சகட்ட அடையாளங்கள் என்று இஞ்ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகையின் முகப்பில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு ஞாயிறு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, RealAudioMP3 இவ்வாரத்தில் திருச்சபை விழா எடுக்கும் சில புனிதர்களை நினைவுகூர்ந்து, இவர்கள் நாத்திக மனிதத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கிறிஸ்தவ மனிதத்திற்கானச் சான்றுகள் என்று எடுத்துரைத்தார்.

புனிதர்கள், குறிப்பாக மறைசாட்சிகளான மாக்ஸ்மிலியன் கோல்பெ, எடித் ஸ்டைன், ஆகிய இருவரும் வரலாற்றில் நாத்திகத்திற்கு எதிரான உண்மையான சாட்சிகளாக இருந்தார்கள், இவ்விருவரும் ஆஷ்விஷ் நாத்சி முகாமில் கொல்லப்பட்டவர்கள் என்று விளக்கிய அவர், யூதமத விசுவாசத்தில் பிறந்த எடித் ஸ்டைன் வயது வந்த போது கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்டு பின்னர் கார்மேல் சபை கன்னியாகி இறுதியில் மறைசாட்சியாக அவளது வாழ்வு முடிந்தது என்றார்.

போலந்தில் பிறந்தவரும் புனித பிரான்சிஸ் அசிசியின் துறவு சபையைச் சேர்ந்தவருமாகிய புனித மாக்ஸ்மிலியன் கோல்பெ, மரியின் மாசற்ற திருஇதயத்தின் மாபெரும் அப்போஸ்தலர் என்றார் திருத்தந்தை.

ஒவ்வொரு மரண முகாமையும் போல நாத்சி வதைப்போர் முகாமையும் தீமையின் உச்சகட்ட அடையாளமாகக் கருதலாம். மனிதன் கடவுளை மறக்கும் போது இவ்வுலகிற்கு வருகின்ற நரகம் அது, மேலும், இவ்வகையான கூறு, மரண முகாம்களோடு நின்றுவிடவில்லை, தெளிவற்ற எல்லைகளின் பரவலான உண்மைத்தன்மையின் உச்சநிலையாக இருக்கின்றது என்றும் கூறினார் அவர்.

கடவுள் மறுப்புக் கொள்கையாகிய இந்த உண்மைத்தன்மை, இரண்டாவது ஆயிரமாம் ஆண்டின் முடிவில் தெளிவானது என்றும் கூறிய அவர், நாத்திக மனிதத்திற்கும் கிறிஸ்தவ மனிதத்திற்கும் இடையேயான எதிர்ப்பு, தூய்மைக்கும் சமய மறுப்புக்கும் இடையேயான எதிர்ப்பு தெளிவாகத் தெரிந்தன என்றார்.

ஒருபுறம் கடவுளுக்குப் பதிலாக வைக்கப்படும் தத்துவங்களும் கருத்துருவாக்கங்களும், இருக்கும் வேளை மறுபுறம் அன்பின் நற்செய்தியை போதித்து அன்பே உருவான கடவுளின் உண்மையான முகத்தைக் காட்டிய புனிதர்கள் என்று உலகின் நிலையை அவர் எடுத்துச் சொன்னார்.

புனிதை கிளாரா, மறைசாட்சிகளான பாப்பிறை போந்தியன், அருள்திரு இப்போலிட்டஸ், தியாக்கோன் இலாரன்ஸ் ஆகியோரையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இவர்கள் இந்தக் குருக்கள் ஆண்டுச் சூழலில் திருநிலைப்படுத்தப்பட்ட குருக்களுக்கு நல்ல மாதிரிகையாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இறுதிவரை அன்பு செய்யும் அந்த அன்புக்குச் சான்றாயுள்ள இந்தப் புனிதர்கள் அவர்கள் எதிர்கொண்ட தீமையைப் புறக்கணித்து நன்மைக்காகப் போராடினவர்கள், பயமின்றி ஆன்மாக்களின் மீட்புக்காக நம் வாழ்க்கையை அர்ப்பணிக்க இவர்கள் தூண்டுகோலாய் இருக்கிறார்கள், அன்பு மரணத்தை வெற்றி கொள்கின்றது என்றும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.