2009-08-07 13:57:00

கென்யாவில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட மரண தண்டனை கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது


ஆக.07,2009 ஆப்ரிக்க நாடான கென்யாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நான்காயிரத்துக்கு மேற்பட்ட கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இவ்வாறு பெருமளவான கைதிகளுக்குத் தண்டனை மாற்றம் செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும் என்று கூறும் ஊடகங்கள், அந்நாட்டில் கடந்த 22 வருடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படவே இல்லை என்றும் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் 1988ம் ஆண்டில் பாகிஸ்தானில் 2000த்துக்கு அதிகமான கைதிகளுக்குத் தண்டனைகள் மாற்றம் செய்யப்பட்டன.

இத்தண்டனை மாற்றம் குறித்து கென்ய வானொலியில் பேசிய அந்நாட்டு அரசுத்தலைவர் முவாய் கிபாகி, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக நீண்ட காலமாகக் காத்திருப்பது, தேவையற்ற மன வேதனையையும் துன்பங்களையும் உளவியல் ரீதியான வேதனைகளையும் ஏற்படுத்துகின்றது என்றார்.

கென்யாவில் ஏறத்தாழ 17 ஆயிரம் கைதிகளுக்கென கட்டப்பட்ட 92 சிறைகளில் தற்போது ஏறத்தாழ 48 ஆயிரம் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.