2009-08-05 14:59:10

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பள்ளிகளை மூன்று நாள்கள் அடைப்பு


ஆக.05,2009. கடந்த வாரத்தில் பாகிஸ்தானில் இடம் பெற்ற கிறிஸ்தவர்கள் மீதான இசுலாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களில் எட்டுக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் பள்ளிகளை மூன்று நாட்கள் அடைத்திருந்தனர்.

சில கிறிஸ்தவர்கள் குரான் புனித நூலை அவமதித்தார்கள் என்ற வதந்தியை நம்பி கடந்த சனிக்கிழமை கோஜ்ரா நகரை நூற்றுக்கணக்கான முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கியதில் ஆறு கிறிஸ்தவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர், இரண்டு பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர் மற்றும் பல வீடுகள் எரிந்து சாம்பலாயின. கடந்த வியாழன் இரவு மற்றுமொரு கிறிஸ்தவ நகரமும் அழிக்கப்பட்டது.

மேலும் இவ்வன்முறைகள் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்ட லாகூர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்கா, இவை திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று தெரிவித்தார்.

கிறிஸ்தவர்களைத் தாக்குவதை நியாயப்படுத்த உதவும் வண்ணம் கிறிஸ்தவர்களின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது எனவும் அழைப்புவிடுத்த பேராயர், பாகிஸ்தானின் மத மோதல்களுக்கான மூலகாரணங்களைக் கண்டு கொள்ள அரசு முன்வர வேண்டுமென அவ்வறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்குத் திருத்தந்தையும் தமது அனுதாபங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ஏறத்தாழ 17 கோடியே 50 இலட்சம் மக்களில் 5 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.