2009-08-05 15:04:27

குருக்கள் இறையன்பிலும் தூய்மையான வாழ்விலும் வாழச் செபிப்போம், திருத்தந்தை


ஆக.05,2009 கோடை விடுமுறையை முன்னிட்டு பாப்பிறைகளின் கோடை இல்லமிருக்கும் காஸ்தெல் கன்டோல்போவில் தங்கியிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று அங்கேயே திருப்பயணிகளைச் சந்தித்து தமது மறைபோதகத்தை வழங்கினார். இவ்வாண்டின் 23வது பொது மறைபோதகமான இச்சந்திப்பின் போது ஏறத்தாழ நான்காயிரம் திருப்பயணிகள், அமெரிக்க ஐக்கிய நாடு, ஸ்பெயின், மெக்சிகோ, பிரேசில், ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி, செகி குடியரசு, இத்தாலி என பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். இத்திருப்பயணிகளுக்குப் புனித ஜான் மரிய வியான்னி மற்றும் சர்வதேச குருக்கள் ஆண்டு குறித்து எடுத்துரைத்தார். RealAudioMP3

ஆங்கிலம் பேசும் திருப்பயணிகள் குழுவை, குறிப்பாக இங்கிலாந்து, சீனா, கொரியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்தவர்களை சிறப்பான வகையில் வரவேற்கிறேன் எனத் தமது உரையைத் தொடங்கினார். நேற்று அதாவது இச்செவ்வாயன்று பங்குக் குருக்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் 150வது இறந்த நாளை நினைவு கூர்ந்து சிறப்பித்தோம். இந்தக் குருக்களின் ஆண்டில் புனித ஜான் மரிய வியான்னியின் பரிந்துரை மூலம் அனைத்துக் குருக்களும் இறைவனின் மீதான அன்பிலும் தூய்மை வாழ்வை மகிழ்வுடன் தொடர்வதிலும் நற்செய்தியை அறிவிப்பதற்கான அர்ப்பணத்திலும் புதுப்பிக்கப்படுவார்கள் எனச் செபிப்போம் என்றார் திருத்தந்தை.

பின்னர் உங்கள் அனைவர் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இறைவனின் அமைதி மற்றும் மகிழ்வின் ஆசீரை வேண்டுகிறேன் எனக் கூறித் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.