2009-08-03 14:10:13

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை சாட்சி இல்லாத மரணம்


ஆக.03,2009. பன்னாட்டு தினங்கள், தேசிய தினங்கள், குடும்ப தினங்கள் என வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல தினங்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தினங்கள் கொண்டாடப்படுவதற்கு ஒவ்வொன்றிற்கும் குறைந்தது ஒரு காரணமாவது இருக்கின்றது. இவற்றில் பல தினங்களில் உறவுகளும் நண்பர்களும் ஒன்றுகூடி அன்பைப் பரிமாறி உறவுகளைப் புதுப்பித்துக் கொள்கின்றனர். இப்படிக் கூடிவரும் எல்லோருக்குமென ஒரு தினமும் இருக்க வேண்டுமல்லவா! இந்தத் தினம்தான் நட்பு தினம். இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது அமெரிக்க ஐக்கிய நாடு. அந்நாட்டு நாடாளுமன்றமான காங்கிரஸ் அவை நட்பு தினம் பற்றிய ஒரு தீர்மானத்தை 1935ம் ஆண்டில் நிறைவேற்றியது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு அன்றைய நாளில் நட்பு தினம் கொண்டாடப்பட வேண்டும். தற்போது இத்தினம் பல்வேறு நாடுகளிலும் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இதிலும், தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் மூன்றாவது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் பிப்ரவரி மாதம் என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் மூன்றாவது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடு இந்த நட்பு தினத்தை அறிவித்ததற்கு காரணம் ஒன்று இருக்கவேண்டுமே. ஆம். அந்நாட்டு அரசு 1935ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி சனிக்கிழமையன்று ஒருவரைக் கொலை செய்தது. இதனைக் கேள்விப்பட்ட அவரின் நண்பன் அதற்கு அடுத்த நாள் அவரின் நினைவாகத் தற்கொலை செய்து கொண்டான். இந்த நட்பின் மேன்மையை நினைவுகூரும் விதமாக இந்த நட்பு தினத்தை அறிவித்தது அப்போதைய அமெரிக்க அரசு. நட்பின் மகத்துவத்தை மதங்களும் எடுத்துச் சொல்கின்றன. “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்று இயேசு சொன்னார். அவரின் சீடர்களும் அவர் வழியைப் பின்பற்றி அவருக்காகத் தங்கள் உயிரையே தானம் செய்து அவரின் உண்மையான நண்பர்கள் என்று செயலில் காட்டினார்கள். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் கடவுளின் நண்பர் என அழைக்கப்பட்டார். தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. தாவீது மற்றும் சவுல் அரசன் மகன் யோனத்தானின் நட்பு மிக உன்னதமானது. இரும்பு, இரும்பால் தீட்டப்படுகிறது. ஆனால் மனிதனோ தன் நண்பனால் தூண்டப்படுவான் என்று பழமொழி நூல் சொல்கிறது.

மகாபாரதத்தில் கர்ணன், பெற்ற தாயால் குழந்தையிலேயே புறக்கணிக்கப்பட்டு தோரோட்டி மகனாக வளர்ந்தவர். பிறப்பறியாப் பாவத்துக்காகப் பழி சுமந்து நின்றாலும் அர்ஜூன்னுக்கு நிகராக வில்வித்தையில் தேர்ச்சி பெற்றவன். மக்கள் மன்றத்தில் விஜயனுக்கு எதிராக வில் எடுத்த போது கீழ்குலத்தில் பிறந்தவனுக்கு ஆயுதம் ஏந்தும் அருகதை இல்லையென்று கிருபாச்சாரியாரால் அவமானமுற்றுத் தலை கவிழ்ந்தவன். இப்படி அவமானங்களை ஏற்ற அவனது இழிநிலை துடைத்து அங்கதேசத்தின் அரசனாக அவனுக்குப் பட்டம் சூட்டினான் துரியோதனன். இந்த இரண்டு இதயங்களும் அன்று நட்பில் இணைந்தன. ஆனால் குருஷேத்திரத்தில் போர் மேகம் சூழ்ந்த போது குந்தி, கர்ணனை துரியோதனனுக்கு எதிராகச் செயல்பட அழைத்தாள். அப்போது அவன், தாயே நீ சொல்லும் பாதையில் நான் செல்லத் துணிந்தால் நட்புத் துரோகம் இழைத்த பாவியாவேன் என்றான். மனிதர்கள் தங்கள் தேவைகள் நிறைவேறும்வரை நட்பு பாராட்டி கைம்மாறு செலுத்த வேண்டிய சமயத்தில் நட்பை மறந்து திசை மாறி நடந்தால் அந்தப் பாவிகளுக்கு மண்ணிலும் விண்ணிலும் நற்கதி கிடைக்காது என்று சாத்திரம் சொல்கிறது. எதன் பொருட்டும் எவர் பொருட்டும் என் நண்பனுக்குத் துரோகம் செய்ய மாட்டேன் என்றான். இதே கர்ணன் பதினாறாம் நாள் பாரதப் போரில் நட்புக் கோயிலுக்குத் தன்னையே உயிர்ப்பலி கொடுத்தான். இராமாயணம் முழுவதுமே நட்பினால்தான் நடக்கிறது. வேடன் குகனின் நட்புதான் இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரையும் கங்கையைக் கடக்கச் செய்தது.

இந்திய மண்ணில் அன்பு கனிந்த நட்பின் பல பரிமாணங்களைக் காண முடிகின்றது. முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரியின் நட்புக்காக உயிர் கொடுத்தவர் புலவர் கபிலன். உறையூர் மன்னன் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு மனதை நெகிழ வைக்கும் நட்பு. நேரில் முகத்தையே காணாமல் மலர்ந்த இந்த நட்பு, உயிர் நண்பரான மன்னன் உயிர்விட்டபோது அவரோடு தாமும் உயிர்விட்ட நட்பு. இன்றும், சேலம் மாவட்டம் சாணாரப்பட்டி என்ற கிராமத்தின் எல்லையைத் தாண்டி ஒண்டுக் குடிசையில் தொண்ணூறு வயது சின்னண்ணன் என்பவர் இந்த வயதிலும் தனிமையில் வசித்து வருகிறார். காரணம் அன்பு. கலப்புத் திருமணம் செய்ததால் இந்த இளம் ஜோடியை ஊரார் ஒதுக்கி வைக்க, ஊரின் எல்லையைத் தாண்டி, ஒரு குடிசைபோட்டுத் தொடங்கிய வாழ்க்கையில் நான்காவது பிள்ளையைக் கருத்தாங்கிய சமயம் மனைவி இலட்சுமி இறந்து விட்டாள். அதனால் அங்கேயே மனைவியின் நினைவிலே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார் தொண்ணூறு வயது சின்னண்ணன்.

அன்பர்களே, நம் வாழ்க்கை நதியின் போக்கை மாற்றும் சக்தி நட்புக்கு உண்டு. இதனால்தான் வள்ளுவரும், நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல் என்ற தலைப்புகளில் நான்கு அதிகாரங்களில் 40 குறள்கள் எழுதியிருக்கிறார். “முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்றார். சிறந்த நட்பு என்பது, முகம் மலர நட்பு செய்வது அல்ல, மாறாக உள்ளம் மகிழ நட்பு செய்வதாகும் என்கிறார். நட்புக்கு அழகு, உள்ளத்தால் ஒத்திருப்பதேயாகும். 'அன்பு மட்டும் இல்லையென்றால், மனிதனுக்கு ஆறுதலே இருந்திருக்காது..! அன்பு இல்லையென்றால், மனிதனுக்கு ஆறுதல் தேடத் தேவையே இருக்காது..!' என்றான் கவிஞன் ஒருவன்.

உறவுகள் எங்கும் வியாபித்திருந்தாலும் உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும் என்னை வாழவைத்துக் கொண்டிருப்பது நட்புதான் என்கிறார் இலங்கை சகோதரர் ஒருவர். உன்னால் உறவினர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, ஆனால் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கலாம். நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில் தோல்வியே அடைய மாட்டான். ஆம். நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரம்பற்ற வீணைக்குச் சமம். ஆழமான அன்பே அழுத்தமான நட்புக்கு அணிகலன். சேர்ந்து அமர்ந்து திரைப்படம் பார்ப்பதும், தேநீர் அருந்துவதும், கடற்கரை மணலில் கனவுகளைப் பகிர்ந்து கொள்வதும் பழக்கத்தை வளர்க்கலாம். ஆனால் இவற்றால் மட்டுமே ஆழமான நட்பு அரும்பி விடாது. இந்தச் சுயநல பொழுதுபோக்குகளில் இன்பத்தைப் பகிர்நது கொள்ளலாம். ஆனால் இதயத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது. நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் கிடைப்பது அரிது. ஆனால் நல்ல நண்பர்களைத் தேடுவோர் முதலில் அவர்கள் நல்ல நண்பர்களாகத் தங்களை நிரூபிக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க அறிஞர் எமர்சனும், ஒரு நண்பனைப் பெறுவதற்கு முதலில் நீ ஒரு நண்பனாக இருப்பது ஒன்றே வழியாகும் என்றார். உண்மையில் வாழ்க்கையில் உங்களால் கொடுக்க முடிந்த ஒன்றே ஒன்று உங்களை மட்டும்தான்.

எனினும் நணபர்களைத் தேர்வு செய்வதில் அதிக விழிப்புணர்வு அவசியம். ஆயிரம் பேரிடம் அறிமுகம் நிகழ்ந்தாலும் ஆழமான நட்புக்கு உரியவர்கள் ஆறுபேர்கூட தேற மாட்டார்கள். இதுதான் இன்றைய தொழிட்நுட்ப உலகின் நிதர்சனம். சோதனைகளின் வெம்மை தாளாமல் பாளம் பாளமாய் பிளந்து கிடக்கும் நெஞ்சில் அமுதமென்னும் அன்பை தாரை தாரையாகப் பொழிந்து வாழ்வில் புதுவசந்தத்தை வார்ப்பதே நட்பு. அன்பின் ஆதிக்கத்தில் தன்னலம் தகர்ந்து விடும். தன்னலத்தின் ஆட்சியிலோ அன்பு அழிந்துவிடும். பயன்படுத்தும் நட்பு நீண்டகாலம் நிலைகொள்வதில்லை. நல்ல நட்பு மனிதனின் மரணம்வரை நிழல்போல் தொடரும். ஒரு தமிழ்ச் சின்னத்திரை தொடர்கூட நட்பின் ஆழத்தைச் சொல்லி வருகிறது.

ப்ரெஞ்ச் பேரரசன் நெப்போலியன் சொல்வாராம் – என் புகழ்பாடும் பரிவாரங்களை மட்டுமே நான் பக்கத்தில் வைத்துக் கொண்டேன். நண்பனைப் போல் யாரிடமும் நடித்த்துகூடக் கிடையாது என்று. ஆனால் அவன் அட்லாண்டிக் பெருங்கடலில் செயின்ட் ஹெலேனா தீவில் ஆயுள் கைதியாக நண்பர்களின்றி, நோயுற்று, அநாதையாக சாட்சிகள்கூட இன்றி இறந்தான் என்பது வரலாறு.

எனவே நினைவில் வைப்போம் - நண்பர்கள் இல்லாத வாழ்க்கை சாட்சி இல்லாத மரணத்துக்குச் சமம். வத்திக்கான் வானொலி நண்பர்களே, உங்கள் நண்பர் வட்டம் எப்படி? நீங்கள் எத்தகைய நண்பர்களாக இருக்கிறீர்கள்? நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க இதோ ஏழு டிப்ஸ்கள்.

ஒருவர் தன் நண்பரிடம் ஒருசெய்தியைச் சொல்ல விரும்பினால் அதை அவரே நேரடியாகச் சொல்ல வேண்டும் அல்லது அவரே கைப்பட கடிதம் எழுத வேண்டும்.

இரண்டு. ஒரு காரியத்தைச் செய்யும் போது அதில் நண்பரையும் ஈடுபடுத்த வேண்டும்.

மூன்று. நண்பர் மகிழ்ச்சியடைவது போல ஏதாவது செய்ய வேண்டும்.

நான்கு. ஏதாவது பிரச்சனை என்றால் இருவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை செய்ய வேண்டும்.

ஐந்து. நண்பர் ஏதாவது செய்யும் போது உடனே அவசரப்பட்டு அது தவறு என்று சொல்லாமல் அதைப் புரிந்து கொள்ள முயற்சி பண்ண வேண்டும்.

ஆறு. நண்பர் சொல்வதனைத்தையும் பொறுமையோடு கேட்டு அவர் சொல்ல விரும்புவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏழு. நண்பர் சொல்லும் கருத்து பிடிக்கவில்லையென்றால் அது சரியில்லை என்று உடனே சொல்லாமல் அதைப் பொறுமையாகக் கேட்டு சிந்தித்த பின்னர் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

விலியத்தில் சீராக் புத்தகம் 6ம் அதிகாரத்தை வாசியுங்கள். நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள். இறைவனுக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.








All the contents on this site are copyrighted ©.