2009-08-01 14:47:54

விளையாட்டு வீரர்கள் கடவுள் தங்களுக்குக் கொடுத்துள்ள கொடைகளுக்கு நன்றிகூற வேண்டும், திருத்தந்தை


ஆக.,01,2009. விளையாட்டு வீரர்கள் கடவுள் தங்களுக்குக் கொடுத்துள்ள கொடைகளுக்கு நன்றிகூற வேண்டும், அதேவேளை நல்லதோர் ஒன்றிணைந்த உலகைக் கட்டி எழுப்புவதில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இச்சனிக்கிழமை கூறினார்.

உரோமையில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள், தொழிற்நுட்பத் துறையினர், வழிநடத்துனர்கள், தன்னார்வப் பணியாளர்கள் என ஏறத்தாழ எழுநூறு பேரை காஸ்தெல் கண்டோல்போ பாப்பிறை மாளிகையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

நன்னெறிக்கூறுகள் இன்றி மிகுந்த ஆர்வத்துடனும் துடிப்புடனும் செயல்படுத்தப்படும் விளையாட்டு, உடல் ரீதியாக முழுமையடையும், ஆனால் அது மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்குப் பயிற்சி கொடுக்கும் பள்ளியாக அமைய வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

விளையாட்டு கடவுள் நமக்குக் கொடுத்துள்ள கொடைகளை நினைத்து அவருக்கு நன்றிகூற வைக்கின்றது என்ற அவர், திருச்சபையும் விளையாட்டை, மனிதனின் ஒருங்கிணைந்த ஆளுமையை வளர்ப்பதற்கு நல்ல கருவியாக இருக்கின்றது என நோக்குகின்றது என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய சர்வதேச நீச்சல் விளையாட்டு அமைப்பின் தலைவர் ஜூலியோ மலியோனே, அமைதி நட்பு ஆகிய மதிப்பீடுகளை ஊக்குவிக்கவும் நலவாழ்வு குடியுரிமை ஆகியவற்றை மேம்படுத்தி உலகஅளவில் நல்லதொரு வாழ்க்கை தரத்தை அமைப்பதற்கும் விளையாட்டு உதவுகின்றது என்றார்.

16 நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் 183 நாடுகளின் 2500 விளையாட்டு வீரர்கள், 2500 தன்னார்வப் பணியாளர்கள், 1500 தொழிற்நுட்பக் கலைஞர்கள், 1500 நிருபர்கள் 4 இலட்சம் பார்வையாளர்கள் எனப் பலர் பங்கு கொள்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.