2009-08-01 17:57:42

வழிபாட்டு ஆண்டின் 18 ஆவது ஞாயிறு. மறையுரை. 01-08-09.


இன்றைய வாசகங்கள் . விடுதலைப்பயண நூல் 16. 2-4 , 12 -15.

தூய யோவான் 6. 24-35.நானே உயிர் தரும் உணவு இயேசு. 010809



ஒரு குடிகாரன் இருந்தார் . குடும்பமும் இருந்தது . அவரது குடிப்பழக்கம் காரணமாக அவனருடைய குடும்பம் மிக்க தொல்லைக்குள்ளானது . தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குடிப்பதில் செலவிட்டு வந்தார் . அவர் கேரளத்தில் உள்ள தியான மடம் சென்று ஒருவாரமாக செபித்துவிட்டுத் திரும்பினார் . இயேசுவின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டார். இயேசுவின்மீது கொண்ட பக்தி காரணமாக அவன் குடிப்பதை நிறுத்திவிட்டார் .

சில மாதங்களுக்குப் பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னர் அவரோடு குடித்துக் கொண்டிருந்த ஒருவர் மனம் திரும்பி வாழ்ந்த இவரைச் சந்தித்தார். நண்பா நீ இப்போதெல்லாம் குடிப்பதற்கு வருவதில்லையே . ஏன் என்று கேட்டார் . நான் இயேசுவைச் சந்தித்தேன். அவரை நான் நம்புகிறேன் . இப்போது குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றார். ஓ நீ இயேசுவை நம்புகிறாயா . அவர் தண்ணீரை திராட்சை இரசமாக்கியதாகச் சொல்லப்படுவதையெல்லாம் நம்புகிறாயா எனக் கேட்டார். நான் இயேசு தண்ணீரை இரசமாக்கியதை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் பீரையும் விஸ்கியையும் என் குடும்பத்தில் அனைவருக்கும் உணவாகவும் உடையாகவும் மாற்றியுள்ளார் என்றார் .

சார்லஸ் கோல்சன் என்பவர் பெரிய செல்வந்தர் . அமெரிக்கத் தலைவருடைய அலுவலகத்தில் முக்கியமான வேலை அவருக்கு. அமெரிக்க அதிபர் மாளிகைக்கு அருகிலேயே மிகப்பெரிய வீடு . சொந்தமாக படகு , கார் , பெருமளவு மாத வருமானம் மற்றும் நிறைந்த பணியாட்கள் என வசதியோடிருந்தார் .

ஆனால் அவர் நிம்மதியும் மகிழ்ச்சியும் இல்லாதிருந்தார் .ஏதோ ஒன்று வாழ்க்கையில் இல்லாததால் வாழ்க்கை வெற்றிடமாகத் தெரிந்தது . ஆனால் அது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை .

ஒரு நாள் நண்பர் ஒருவர் இயேசுவை நம்பி கடவுள் பற்றுமிக்கவராக மாறிய அவரது வரலாற்றை எடுத்துக் கூறினார் . சார்லஸ் கோல்சன் அவருக்கு இருந்த அணையாத தாகம் கடவுள் இல்லாமையே என உணர்ந்தார் . அன்றிரவே தனியாகச் செபிக்க ஆரம்பித்தார் சார்லஸ் கோல்சன் . அவர் மனமாற்றம் பெற்றார் . அவர் அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் பார்த்துக் கொண்டிருந்த முக்கியமான பணியை உதறிவிட்டு இயேசுவின் பக்தராக பித்தராக மாறினார் . அமெரிக்கா முழுவதும் ஆச்சரியப்பட்டது . அன்று அதிபராக இருந்த நிக்சனின் ஆட்சியில் கொடிக்கட்டி பறந்தவர் சார்லஸ் கோல்சன் . அமெரிக்காவின் செய்தி ஏடுகள் லாஸ் ஆஞ்சலஸ் டைம்ஸ் , மற்றும் நியூயார்க் டைம்ஸ் போன்றவை சார்லஸ் கோல்சன் மனம் மாறி கிறிஸ்துவின் சீடரானார் என அவரை வர்ணித்தன .

இறைவனைத் தவிர்த்த இறைவனுக்கெதிரான எந்த மகிழ்தச்சியும் உண்மை மகிழ்ச்சியன்று . இவையாவும் இன்றிருந்து நாளை மறையக் கூடியன . அழிந்து போகும் உணவுக்கு ஒப்பானவை . அழியும் இன்பங்களில் அமிழ்ந்து அழிந்துவிடாது நாம் எச்சரிக்கையாக சாதுரியாமாக இருக்கவேண்டும் . உலகமே நமதானாலும் வாழ்வை இழந்தால் வரக்கூடிய பயன் என்ன .

இயேசு தாமே உண்மையான உயிர் தரும் உணவு என்கிறார். கிறிஸ்துவின் சொற்களே , அவர் தரும் மதிப்பீடுகளே , இயேசுவே அந்த உண்மையான நிலையான உயிர் தரும் உணவு. வாழ்வு தரும் உணவு நானே . என்னிடம் வருபவருக்கு பசியே இராது . என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகமிராது என்று இயேசு கூறுவதும் இதுவே .

நம் வாழ்வில் நாம் நமக்குள் ஏதோ ஒரு ஏக்கமும் தாகமும் இருந்ததை உணர்ந்திருக்கிறோமா . அது ஒருவேளை என்னவென்று தெரியாது இருந்திருக்கிறோமா . நானே வானின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு என்கிறார் இயேசு .

தன்னை விசுவசிப்போர் நிலைவாழ்வை , நிறைவாழ்வைப் பெறுவர் எனத் தெரிவிக்கின்றார் . இயேசுவைப் பற்றிக் கொண்ட கோடான கோடிப்பேர் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றதாக வரலாறு சான்று கூறுகிறது .

இன்றைய வாசகம் இந்த உண்மையைக் கூறுகிறது . நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏதோ ஒரு தாகமிருக்கிறது . அத்தாகத்தை இயேசு மட்டுமே நீக்க முடியும் , நிறைவு செய்யமுடியும் . மற்றவர் வாழ்வில் மன அமைதிக்கு வழிவகுக்கும் இன்றைய அருள்வாக்கு நம் வாழ்விலும் நாம் சம்மதித்தால் புது அர்தங்களைத் தரக் காத்திருக்கிறது .



சார்லஸ் கோல்சன் செபித்த அதே செபத்தை நாமும் செபிப்போம்.

இறைவா உம்மை எப்படிச் சந்திப்பது எனத் தெரியவில்லை . ஆனால் நான் முயற்சிக்கிறேன் . நான் இப்போது உம்மை மறந்து வாழ்கிறேன் . ஆனால் நான் என்னை முழுவதும் உமக்கு கையளிக்க விரும்புகிறேன் . ஏற்றருளும் இறைவா .








All the contents on this site are copyrighted ©.