2009-07-31 15:06:24

கான்கிளேவ் அறை முதன்முதலில் உருவான வித்தெர்போ நகருக்கு செப்டம்பரில் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை


ஜூலை31,2009. கான்கிளேவ் எனப்படும் கத்தோலிக்கத் திருச்சபையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதெற்கென, கர்தினால்கள் முதன்முறையாகக் கூடியிருந்த அறை இருக்கும் இத்தாலிய நகருக்கு வருகிற செப்டம்பரில் ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோமைக்கு தெற்கேயுள்ள காஸ்தெல் கன்டோல்போவில் கோடை விடுமுறையில் இருக்கும் திருத்தந்தை, வருகிற செப்டம்பர் ஆறாம் தேதி வித்தெர்போ நகர் சென்று அங்குள்ள பாப்பிறைகளின் மாளிகையிலுள்ள கான்கிளேவ் அறையைப் பார்வையிடுவார்.

உரோமைக்கு ஏறத்தாழ 65 மைல் தூரத்திலுள்ள வித்தெர்போவில் திறந்த வெளியில் திருப்பலியும் நிகழ்த்தும் அவர், காஸ்தெல் கன்டோல்போ திரும்பும் முன்னர், ஹெலிகாப்டரில் புனித பொனவெந்தூர் பிறந்த பாக்னோரெஜ்ஜியோ சென்று அந்நகர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள அப்புனிதரின் புனித தோள்பட்டை பகுதியைத் தரிசிப்பார்.

1217ம் ஆண்டு பிறந்த புனித பொனவெந்தூரின் உடல் பிரான்சில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருச்சபையின் மறைவல்லுனரான புனித பொனவெந்தூரின் எழுத்துக்களில் கோட்பாட்டு வெளிப்பாடு பற்றி முனைவர் பட்டத்துக்கு அடுத்த பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1261க்கும் 1281க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் திருச்சபையை வழிநடத்திய எட்டு திருத்தந்தையர்களுள் ஐந்து பேர் வித்தெர்போவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 1261ல் திருத்தந்தை 4ம் உர்பானும், 1271ல் திருத்தந்தை 10ம் கிரகரியும், 1276ல் திருத்தந்தை 21ம் அருளப்பரும், 1277ல் திருத்தந்தை 3ம் நிக்கோலாசும், 1281ல் திருத்தந்தை 4ம் மார்ட்டினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கர்தினால்கள் கூடுவது, ம் 1271ம் ஆண்டு வரை, கான்கிளேவ் என அழைக்கப்படவில்லை. கான்கிளேவ் என்றால் பூட்டும் சாவியும் என்ற அர்த்தமாகும்.

1268ம் ஆண்டில் திருத்தந்தை 4ம் கிளமெண்ட் இறந்த பின்னர் வித்தெர்போவில் கூடிய கர்தினால்கள் 33 மாதங்கள் வரை ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் இருந்தனர். எனவே அந்நகர அதிகாரிகள் கர்தினால்கள் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வரை, அவர்களை ஓர் அறையில் பூட்டி அவர்களுக்கான உணவு, தண்ணீர் ஆகியவற்றைக் குறைத்து, தூய ஆவி தாராளமாக இறங்கி வருவார் என்று சொல்லி அவ்வறையின் மேல் கூரையையும் எடுத்துவிட்டனர்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை கிரகரி, பாப்பிறைத் தேர்வுகள் கான்கிளேவ் என்ற அறையில் இடம் பெறும் என்பதைத் திருச்சபை சட்டமாகக் கொண்டு வந்தார்.








All the contents on this site are copyrighted ©.