2009-07-29 10:24:12

திருத்தந்தையின் சுற்றுமடல் கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமானது, கர்தினால் பெர்த்தோனே


ஜூலை28,2009. காரித்தாஸ் இன் வெரித்தாத்தே அதாவது உண்மையில் பிறரன்பு என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் அப்போஸ்தலிக்கச் சுற்றுமடல் இயற்கைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அது மத நம்பிக்கையாளருக்கும் மதநம்பிக்கையற்றவர்களுக்குமென எல்லாருக்கும் பொதுவானது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.

இத்தாலிய செனட் அவைத் தலைவர் ரெனாத்தோ ஸ்கிபானி மற்றும் பல அங்கத்தினர்களை இன்று காலை செனட் அவையில் சந்தித்து திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இந்த அப்போஸ்தலிக்கச் சுற்றுமடல் பற்றிக் கலந்துரையாடிய கர்தினால் பெர்த்தோனே, இதன் தலைப்புக்களான அன்பு, உண்மை ஆகிய இரண்டையும் திருத்தந்தை எவ்வாறு ஒன்றிணைத்துள்ளார் என்பது பற்றி விளக்கினார்.

இந்த இரண்டு தலைப்புகளும் மனிதன் மீது புகுத்தப்பட்டவையல்ல, மாறாக இவை மனிதனில் ஆழமாக வேரூன்றியிருப்பவை என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் மனித இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ள இயற்கைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருள்ளன மற்றும் அவை பல்வேறு கலாச்சாரங்களிலும் பண்பாடுகளிலும் இருக்கின்றன என்றும் உரைத்த கர்தினால், இந்தச் சூழலிலிருந்து மனித உரிமைகளை நீக்குவது, அதன் போக்கைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும் என்றும் கூறினார்.

நன்னெறிக்கான அவனது தேடலில் அவன் தான் யார் மற்றும் தனது இயல்பின் அடிப்படையான ஈர்ப்புகள் பற்றி உணருகிறான், எனவே மனிதன் உண்மையை அதன் அனைத்து முழுமையிலும் அறிய வேண்டியவன் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து வேகமாக வெளிவருவது பற்றியும் பேசிய கர்தினால் பெர்த்தோனே, பொருளாதாரத்தையோ சந்தையையோ அரசுகள் கட்டுபடுத்த வேண்டுமென்று இச்சுற்றுமடல் அழைப்புவிடுக்கவில்லை, ஆனால் அது, ஜனநாயக அரசுகள் தங்கள் குடிமக்களின் பொருளாதார நலவாழ்வு உட்பட அவர்களின் பொதுநலனை பாதுகாத்து ஊக்குவிப்பதற்குத் தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளன என்ற உண்மையை தெளிவுப்படுத்துகின்றது என்றார்.










All the contents on this site are copyrighted ©.