2009-07-27 14:57:57

இயேசுவுக்கு உதவி செய்வது எப்படி? விளக்குகிறார் திருத்தந்தை


ஜூலை27,2009. குருக்கள் தங்களது மனிதப் பலவீனங்களுடன் கிறிஸ்துவின் கரங்களில் தங்களை அர்ப்பணிப்பதன் மூலம் மீட்பின் கருவிகளாக மாறுகிறார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருத்தந்தை கோடை விடுமுறையிலிருக்கும் வடஇத்தாலியின் லெ கோம்பெஸ் இல்லத்துக்கு முன்னர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு குருத்துவம் மற்றும் அப்பங்கள் பலுகிய புதுமை பற்றிய சிந்தனைகளை வழங்கிய போது இவ்வாறு கூறினார்.

இந்த விடுமுறை நாட்களில் தனக்கு ஏற்பட்ட சிறிய விபத்துக்களின் மத்தியிலும் இந்நாட்கள் உண்மையான ஓய்வாக, மகிழ்ச்சியான நாட்களாக இருந்தன, இதற்குக் கடவுளுக்கு முதலில் நன்றி சொல்வதாகவும் கூறினார் அவர்.

நம் ஆண்டவர் தமது படைப்பின் அனைத்து அழகையும் நமக்குக் காண்பிக்கும் இந்த நேர்த்தியான ஞாயிறன்று, திருவழிபாடும் தூய யோவான் நற்செய்தியின் ஆறாம் அதிகாரத்தின் தொடக்கப் பகுதியாகிய ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களைக் கொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு இயேசு உணவு வழங்கிய புதுமை பற்றிச் சிந்திக்கிறோம், இப்புதுமைக்குப் பின்னர், புயலடித்த கடல் மீது இயேசு நடந்து சென்ற அற்புதம், பின்னர் நானே வாழ்வுதரும் உணவு என்று இயேசு தம்மையே வெளிப்படுத்திய அவரின் போதகத்தை நற்செய்தியில் வாசிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இயேசு அப்பங்களை எடுத்து கடவுளுக்கு நன்றி கூறிய செபத்திற்கு நற்செய்தியாளர் பயன்படுத்தியுள்ள வினைச்சொல்லானது இயேசுவின் இறுதி இரவு உணவு நிகழ்ச்சியை நேரிடையாகக் குறித்துக் காட்டுகிறது, இங்கு, திருநற்கருணை வாழ்வின் மிகப்பெரும் அடையாளமாக முன்னரே காட்டப்படுகிறது எனறும் அவர் விளக்கினார்.

அப்பங்கள் பலுகிய புதுமை பற்றிய நற்செய்திப் பகுதி, குருக்கள் ஆண்டுக்குப் பொருந்தி வருவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு எங்கிருந்து அப்பங்களைப் பெற முடியும் என்று இயேசுவிடம் கேட்ட திருத்தூதர்களோடு குருக்கள் தங்களை ஒப்பிடலாம் என்று கூறினார்.

ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டிருந்த அந்தச் சிறுவன் பற்றி வாசிக்கும் போது, நாமும் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இவை எம்மாத்திரம்? அதாவது நான் யார்? எனது மனிதப் பலவீனங்களுடன் இயேசுவுக்கு அவரது பணியில் என்னால் உதவ முடியுமா? என்று கேட்கலாம் என்றார் திருத்தந்தை.

எனினும் நம் ஆண்டவர் இதற்குப் பதிலளிக்கிறார் என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குருக்கள் எவ்வளவுதான் பலவீனர்களாய் இருந்தாலும் இயேசுவின் புனித மற்றும் ஆராதனைக்குரிய கரங்களில் அர்ப்பணிப்பதன் மூலம் அனைவருக்குமான மீட்பில் கருவிகளாக மாற முடியும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.