2009-07-25 14:30:27

திருத்தந்தை - அன்பும் இரக்கமுமே உண்மையான அதிகாரம்


ஜூலை25,2009. இன்றைய உலகில் அதிகாரம், பிறர்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது அவர்களை அடக்கி ஆளுவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் வேளை, கிறிஸ்தவர்களோ, தமது அனைத்து வல்லமையையும் அன்பு மற்றும் இரக்கத்தின் மூலமாக வெளிப்படுத்தும் எல்லாம்வல்ல இறைவனின் மீதான தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுகிறார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இறைவனது வல்லமையின் முழுநிறைவான உச்சநிலையானது, அவர் நம்மோடு நமக்காக துன்பப்படுவதில் அமைந்திருக்கின்றது என்று, இத்தாலிய ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள அவுஸ்தா என்ற நகரில் இவ்வெள்ளிமாலை திருத்தந்தை நிகழ்த்திய மாலை திருப்புகழ்மாலை திருவழிபாட்டில் கூறினார்.

இம்மாதம் 13ம் தேதியிலிருந்து கோடை விடுமுறையை செலவழித்து வரும் லெஸ் கோம்ப்ஸ்க்கு ஏறத்தாழ பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அவுஸ்தா நகர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் இடம் பெற்ற மாலை திருவழிபாட்டில் ஆற்றிய மறையுரையில், இன்னும் பெருமளவான மக்கள் பாரம்பரிய மதங்களைப் பின்பற்றி வரும் ஆப்ரிக்கா, ஆசியா, இன்னும்பிற பகுதிகளின் ஆயர்களோடு நடத்திய உரையாடல்கள் மூலம் தான் கண்டுணர்ந்ததையும் பகிர்ந்து கொண்டார்.

கடவுள் ஒருவரே என்பதை அம்மக்கள் நம்புகின்றனர், ஆயினும் அவர் வெகு தொலைவில் அல்லது மறைவாக இருக்கின்றார், எனவே அவர்களின் அன்றாட விசுவாசம் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கின்ற ஆவிகளிலும் மூதாதையர்களிலும் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்தவத்தின் போதனையில் இருக்கின்ற புதினம் என்னவென்றால், கடவுள் மனிதனானார், அவர் தம்மையே மனித சமுதாயத்திற்கு வெளிப்படுத்தினார், இதன்வழியாக அவரோடு ஆள் ஆள் உறவு கொள்வதற்கான வாய்ப்புக்களைத் திறந்துள்ளார் என்று உரையாற்றினார் அவர்.

கடவுள் சர்வ வல்லமையும் நிறைந்தவர் என்பதால் நாம் பிற சக்திகளுடன் தொடர்பு வைக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

பல நவீனகால ஆண்களும் பெண்களும், கடவுளின் சர்வவல்லமை அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்று நினைத்து அவ்வல்லமையால் அச்சுறுத்தப்படுவதாகப் பெரும்பாலும் உணருகிறார்கள் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் நன்மைத்தனம் நிறைந்தவர், அவர் உண்மையானவர் என்பதால் அவரின் வல்லமை விதிமுறைக் கட்டுபாடுகளை விதிப்பதல்ல என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

இறைவன் எதையும் செய்ய வல்லவர், ஆனால் அவர், நன்னைத்தனம், உண்மை, அன்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுபவர் அல்ல, ஏனெனில் அவரே நன்னைத்தனம் நிறைந்தவராக, உண்மையான சுதந்திரமாக, அன்பாக இருக்கின்றார் என்றார் அவர்.

கடவுள் தம் மக்களைக் கண்காணித்து வரும் போது அவர் மேற்பார்வையில் ஈடுபட்டவராய் இருப்பதில்லை, ஆனால் தமது படைப்புகள் பாதுகாப்புடன் இருப்பதற்காக அவர்களைக் கரிசனையுடன் காத்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.

அதிகாரம், வல்லமை என்று இன்று மக்கள் நினைக்கும் போது, பிறரை கட்டுக்குள் வைத்திருப்பதற்குத் தங்கள் பணத்தைப் பயன்படுத்தும் பணக்காரரை அல்லது இராணுவ சக்தி மூலமாக பிறரை அடக்கி ஆள்பவர்களை இயல்பாகவே நினைக்கக்கூடும், ஆனால் உண்மையான வல்லமை அதுவல்ல, எவ்வளவு படைவீரர்களைத் திருத்தந்தை கொண்டிருக்கிறார் என்ற ஸ்டாலினின் கேள்வியே அதிகாரம் என்றால் என்னவென்று இன்றும் பலரின் எண்ணத்தைக் குறித்து காட்டுகின்றது, ஆனால் கடவுளின் வல்லமையின் உச்சநிலை இரக்கமும் மன்னிப்புமே என்று நற்செய்தி போதிக்கின்றது என்றார் திருத்தந்தை.

கடவுள் எல்லாம் வல்லவர் என்றால் உலகை மீட்பதற்காக அவர் தம் மகனை அனுப்பி அவர் துன்புற்று இறக்க வேண்டும் என்று ஒருவர் இயல்பாக கேள்வி கேட்கலாம், எனினும் அது தேவையானது, ஏனெனில் உலகில் தீமையும் அநீதியும் வெறுப்பும் வன்முறையும் பெருங்கடலாக மண்டிக்கிடக்கின்றன, வெறுப்புக்கும் அநீதிக்கும் பலியாகும் பலர் நீதியின் படைப்பைப் பார்ப்பதற்குரிய உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றார் அவர்.

அநீதிகளால் துன்புறும் மக்களின் அழுகுரல்களைக் கடவுளால் புறக்கணிக்க முடியாது, மன்னிப்பு என்பது புறக்கணிப்பு ஆகாது, ஆனால் மாற்றம் பெறுவதாகும், ஆதலால் கடவுள் தமது மிகப்பரந்த பெருங்கடல் போலான நன்னைத்தனம் மற்றும் அன்பால் அநீதிப் பெருங்கடலை எதிர்ப்பதற்கு இவ்வுலகில் நுழைய வேண்டியிருந்தது என்றார்.

கிறிஸ்துவைப் பின்செல்பவர்கள் உலகை மாற்றுவதற்குத் தங்களின் தியாகங்களை அர்ப்பணிக்கும் குருத்துவச் செயலைச் செய்ய அழைக்கப்படுகிறார்கள் என்றார்.












All the contents on this site are copyrighted ©.