2009-07-25 17:16:01

ஆண்டின் 17 ஆவது ஞாயிறு மறையுரை . 2607009 .


இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு . குறள் எண்1064 .



உணவுக்கு இடமில்லாத போதும் இரத்தலுக்கு உடன்படாத பண்பு உலகமெல்லாம் கொள்ளமுடியாத பெருமையுடையது.

மக்கள் உணவுக்காக கையேந்துவதை இந்தியாவிலும் சரி , உரோமையிலும் காண்கிறோம் . அன்னை தெரசா இந்த ஏழைகள் மீது பரிவும் பாசமும் கொண்டு தம் வாழ்வையும் தாம் தலைமை தாங்கிய துறவற சபையையும் ஏழைகளுக்கு மனித மாண்பை வழங்கிட அர்ப்பணமாக்கினார் . முக்கியமாக கைவிடப்பட்டோர் பாதுகாப்பாக பாசத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்தார் . அவரைப்போல எத்தனை எத்தனையோ இரக்கமுள்ள உள்ளங் கொண்டோர் தம் வாழ்வை ஏழைகளுக்காக அர்ப்பணித்துள்ளார்கள். இருளைப் பழிப்பதற்குப் பதிலாக ஒரு விளக்கையாவது ஏற்றுவது நல்லதுதானே .

இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த நிகழ்ச்சியை நாம் இன்று பார்க்கிறோம் . இந்நிகழ்ச்சியை தூய மத்தேயு , தூய மாற்கு , மற்றும் தூய லூக்காவும் அவர்களது நற்செய்தியில் வழங்குகிறார்கள் . இந்நிகழ்ச்சியை திவ்ய நற்கருணையின் அறிகுறி என்பர் .



உடலுக்கு உணவு அளிப்பவர் இயேசு .அவர் சொற்களைக் கேட்டு, அவர் செயல்களைக் கண்டு இயேசுவைப் பெரும் கூட்டம் பின் தொடர்கிறது . அவர்கள் ஆயர் இல்லாத ஆடுகள்போல் இருந்ததால் இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டார் . பல நாட்களாக அவரைச் சுற்றி வரும் அவர்களின் பசிப்பிணியை நீக்க இயேசு விரும்புகிறார் . எனவே இவர்கள் எல்லோருக்கும் உணவளிப்பதற்கு எங்கிருந்து அப்பம் வாங்குவது என்று வினவி அவ்வினாவிற்குத் தாமே பதிலளிக்கிறார் இயேசு .

5 அப்பங்களையும் 2 மீன்களையும் கொண்டு அவர்கள் எல்லோரையும் பசியாற உண்ண வைக்கிறார் . இங்கு இயேசுவின் புதுமையைக் கண்டு வியப்படைவதைவிட அவர் பசியுற்ற மக்களுக்கு உணவளிப்பதை மனதில் நிறுத்துதல் நல்லது . நான் பசியாய் இருந்தேன் , நீங்கள் உணவு கொடுத்தீர்கள் என்று இயேசு நமக்கு அன்றாடம் சொல்லக்கூடிய முறையில் நம் வாழ்வு அமைய வேண்டும் . உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் என்கிறோம் . பகிர்ந்துண்டால் பசியாறும் என்பதை உணர்ந்து , ஏழை எளியோருக்கு உணவும் உதவியும் அளிக்க முன் வருகிறோமா . ஏழைகளின் கொடும்பசியைப் போக்க வேண்டும் . அச்செயலே தான் தேடிய பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும் . தவமிருப்பவர்களும் பிறர் பசியைப் போக்கும் நற்செயலுக்குப் பின்னரே தவத்தை மேற்கொள்ள வேண்டும் .

உயிர் அளிப்பவர் இயேசு . நானே வானின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு . இதை எவனாவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் என்கிறார் இயேசு . பாலைவனத்தில் அலைந்த இஸ்ராயேலருக்கு மன்னா என்னும் உணவு வயிற்றுப்பசி தீர்த்தது . இயேசு அளிக்கும் உணவோ உயிரை ஆன்மாவை மனிதமுழுமையையும் வளப்படுத்தும் உணவு என்பதை இவ்வாசகம் விளக்குகிறது . மேலும் திவ்ய நற்கருணையை ஏற்படுத்திய இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி அதைப்பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார் .. இவ்வாறு இயேசு திவ்ய நற்கருணையே ஏற்படுத்தினார் . இதே இயேசுதான் பந்தியமர்ந்தவர்களுக்குப் பகிர்ந்தளித்தார் . சொல் அமைப்பில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுபட்டிருப்பது அப்பங்களைப் பலுகச் செய்த நிகழ்ச்சி திவ்ய நற்கருணை ஏற்பாட்டின் அறிகுறி என்பதைத் தெளிவாகச் சுட்டுகிறது . மேலும் அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம் . முடிவில்லா வாழ்வளிக்கும் உணவுக்கே உழையுங்கள் . அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார் என்று இயேசு கூறுவதும் விண்ணக உணவை திவ்ய நற்கருணையை சுட்டுவதைக் காண்க. இவ்வுயிர் தரும் உணவைப் பரிமாறும் திருப்பலிபூசையில் பங்கேற்பது வெறும் ஆசாரமாக மட்டும்தான் நம் வாழ்வில் இருக்கிறதா . அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை அது கொண்டுவருகிறதா . நீதியோடும் நேர்மையோடும் சமாதானத்தோடும் வாழ உரமும் அளித்திடும் உணவாக அமைகிறதா . திருப்பந்தியிலே நாம் பங்கு பெறும்போது இயேசுவை , அவரது சொற்களை , மதிப்பீடுகளை நமது வாழ்க்கையோடு ஈடுபடுத்துகின்றோமா . இயேசு அப்பங்களைப் பிட்டுக் கொடுத்தது போல நமது வாழ்வையும் பிறர்பணியில் பிட்டு , உடைத்து அதன்வழி பிறர் வாழ்ந்திட உதவுகிறோமா . திருப்பந்தியில் அன்றாடம் பங்கு பெறுவது நம் குறிக்கோளற்ற வாழ்க்கைக்குச் சவாலாக அமைகிறதா .

நாம் அனைவரும் இணைந்து செபிப்போம் .இறைவா ஏழை என் அர்ப்பணத்தை ஏற்றருளும் . எந்தன் சிந்தனை , சொல் அனைத்தும் , எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் , எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் உன் புகழ் அதிமிக மகிமைக்கே . உம் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் வாழ்வில்லை , அதில் பயனில்லை . இறைவா எல்லாம் உமக்காக . ஏழை என் அர்ப்பணம் ஏற்றருளும் .








All the contents on this site are copyrighted ©.