2009-07-25 14:32:18

ஆகஸ்ட் 23ம் தேதியை அமைதி மற்றும் நல்லிணக்க நாளாகக் கடைபிடிப்பதற்கு இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு


ஜூலை25,2009. ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை தொடங்கிய நாளை அமைதி மற்றும் நல்லிணக்க நாளாகக் கடைபிடிப்பதற்கு இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

கட்டாக்-புவனேஸ்வர் கத்தோலிக்கப் பேராயர் இல்லத்தில் பேராயர் இரபேல் சீனத் தலைமையில் பல கிறிஸ்தவச் சபைகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நிருபர் கூட்டத்தில், கடந்த காலத்தை மன்னித்து மறந்து, தீமையை வடிவமைக்கும் குற்றவாளிகள் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவோர் இல்லாத ஒருங்கிணைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவோம் என்று கூறப்பட்டது.

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கெதிராக வன்முறை தொடங்கப்பட்டதிலிருந்து அமைதியும் நல்லிணக்கமும் பாதிக்கப்பட்டன, எனவே அந்நாளை நினைவுகூரும் விதமாக அந்நாள் அமைதி மற்றும் நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று பேராயர் சீனத் கூறினார்.

ஒரிசாவின் இந்துமத தேசியவாதத் தலைவரான சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டதற்கு கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்கள் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. இதில் ஏறத்தாழ 90 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்தனர்.

சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதி மதத்தை அரசியலோடு கலக்கிறார் என்று சொல்லி அவரைத் தண்டிப்பதற்காக அவரைக் கொலை செய்ததாக மாவோயிஸ்ட்டுகள் பொறுப்பேற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.