2009-07-21 15:09:41

கிழக்கு தைமூரை அடக்கிஆள இந்தோனேசியாவிற்கு ஆயுதங்களை விற்ற பிரிட்டன் அரசு பரிகாரம் செய்ய வேண்டும்


ஜூலை 21,2009. கிழக்கு தைமூரை அடக்கிஆள உதவும் வகையில் இந்தோனேசியாவிற்கு ஆயுதங்களை விற்ற பிரிட்டன் அரசு, அதற்கான பொறுப்பை ஏற்று பரிகாரம் செய்ய வேண்டுமென கத்தோலிக்க அமைப்பு ஒன்று அழைப்புவிடுத்துள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு வழிவகுத்த ஐ.நா.மேற்பார்வையிலான மக்கள் கருத்து வாக்கெடுப்பு கிழக்கு தைமூரில் நடத்தப்பட்டதன் பத்தாம் ஆண்டு நினைவுநாள் நெருங்கி வரும் வேளையில் புரோகிரேஜ்ஜியோ என்ற அமைப்பு இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது.

கிழக்கு தைமூரை 25 ஆண்டுகளாக ஆக்ரமித்திருந்த இந்தோனேசியாவின் அடக்குமுறைகளுக்கு உதவும் நோக்குடன் இங்கிலாந்து, 28 கோடியே 77 இலட்சத்து 50 ஆயிரம் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை விற்றதைச் சுட்டிக்காட்டிய இவ்வமைப்பு, இவ்வாயுதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய தார்மீகக் கடமை பிரிட்டனுக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

கிழக்கு தைமூர் மீதான இந்தோனேசிய ஆக்ரமிப்புக் காலத்தின் போது இரண்டு இலட்சம் கிழக்கு தைமூர் மக்கள் பஞ்சத்தாலும் போராட்டத்தாலும் இந்தோனேசிய அரசின் அடக்குமுறையாகளாலும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.