2009-07-20 15:49:05

நீதி கேட்கும் தகுதி யாருக்கு உண்டு?


ஜூலை20,2009. இந்த வாரம் அலசுவதற்கென இத்திங்கள் தினத்தாளைத் திறந்த போது இரண்டு தலைப்புச் செய்திகள் நம் கவனத்தை ஈர்த்தன. ஒன்று, மலேசியாவிலிருந்து மயக்கத்துடன் வரும் தமிழக இளைஞர்கள், இரண்டு, தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் மனு போட்டால் மிரட்டல். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வறட்சி, வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பல இளைஞர்களும் இளைஞிகளும் மலேசியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் வேலைதேடிச் செல்கின்றனர். இவர்களின் தேவைகளை அறிந்த புரோக்கர்கள் பல ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்நாட்டில் குறைந்த சம்பளத்துக்கு வேலையில் சேர்த்து விடுகின்றனர். அந்த இளையோரும் தங்கள் பணிக்காலம் முடிந்தவுடன் வேலைக்கான ஊதியத்தைக் கேட்கும் போது, பணி வழங்கிய நிர்வாகமே அவர்களுக்குப் போதை ஊசி போட்டு ஆட்களைக் கொண்டு சென்னைக்கு விமானத்தில் ஏற்றி விடுகின்றனராம். இந்தக் கொடுமை தொடர்ந்து நடக்கிறதாம். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓர் இளம்பெண் போதையுடன் சென்னை வந்துள்ளார்.

இந்தியாவில் தற்சமயம் தகவல் உரிமைச் சட்ட விழிப்புணர்வு கிராமங்களில் அதிகமாகப் பரவியுள்ளது. ஆனால் தகவல் உரிமைச்சட்ட மனுப்போடும் அப்பாவி கிராம மக்கள் பல மாநிலங்களில் மிரட்டப்படுகின்றனர். இந்த மிரட்டல்களை அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளும் செய்வதாக நாற்பது விழுக்காட்டு மக்கள் கூறியுள்ளனர். மேலும், உங்களுக்கு வேண்டிய தகவல்கள் சாதாரண மனுச்செய்தாலே கிடைக்கும் என்று தவறாக வழிகாட்டப்படுவதாக முப்பது விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். சில வடமாநிலங்களில் மனுசெய்த கிராமத்தினர் சிலர் சித்ரவதைகளை அனுபவித்திருக்கின்றனர். இதனால் சிலர் ஊரைவிட்டே வெளியேறியிருக்கின்றனர். சில தனியார் நிறுவனங்களின் உதவியுடன் பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு இவ்வாறு தெரிவிப்பதாகச் செய்தியில் வாசித்தோம்.

வெளிச்சத்தின் பார்வையில் வேறுபாடு தெரியலாம் என்பதால் என்னவோ தர்ம தேவதை தம் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டி கைத்தராசில் கவனம் செலுத்த முடியாமல் சில நேரங்களில் தப்புத் தப்பாய்த் தீர்ப்பு வழங்கி விடுகிறாள். பூமாதேவியின் செல்வப்புதல்வியான நீதிதேவதை எம்மண்ணில் இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன என்று இலங்கைத் தமிழர்கள் கண்ணீர் விடுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை உலக நாடுகள், சர்வதேச நீதி தினத்தை கடைபிடித்தன. 1998ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைப்பதற்கான விதிமுறைகள் உரோமையில் கொண்டுவரப்பட்டதை சர்வதேச சமூதாயம் ஏற்றுக் கொண்ட அந்நாளில் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எத்தனை நியாய தர்மங்கள் இருந்தாலும் அரசியல் செல்வாக்கிற்கு முன்னர் நீதிநியாயங்கள் சூன்யமாகிவிடுகின்றன. மதுரையில் உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட துறையில் ஊழல் செய்த ஓர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக அவருக்கு வேண்டிய அரசியல் புள்ளி ஒருவர் நடவடிக்கை எடுக்கக் காரணமானவர்களை மிரட்டியிருக்கின்றார். மேலும், கட்டுப்பாடும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட இடதுசாரி இயக்கங்களில் அந்த நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது என்று ஆதாரங்களோடு இவ்வாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்காலத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் வீரசிங்தேவ் என்ற ஒரு மனுநீதி சோழன் இருந்திருக்கிறார். ஒருசமயம் வேட்டைக்குச் சென்ற அவரது மகன் ஒரு துறவியைக் கொன்றுவிட்டான். மக்கள் அந்த இளவரசரைப் பிடித்து வந்து அரசன் முன்னிலையில் நிறுத்தினர். அப்போது அரசர் தன் மகனிடம், துறவியைக் கொன்றது நீதானே என்று கேட்டார். அதற்கு அவன், நான் இல்லை, என்னுடைய வேட்டைக்கு இடைஞ்சலாக இருந்த அந்தச் சாமியாரின் அசட்டுத் துணிச்சலுக்குத் தண்டனை கொடுத்தேன். அவ்வளவுதான் என்றான். ஆயினும் அரசருக்கு அடுத்த வாரிசு இவன் என்பதால் அரசின் முக்கிய அதிகாரிகள் இளவரசனுக்காகப் பரிந்து பேசினர். ஆனால் அடுத்த நிமிடமே அவன் தனது தந்தையின் வாளுக்கு இரையானான். அதன்பின்னர் அரசர் வீரசிங்தேவ் மக்களிடம் பேசினார். இந்தத் திமிர் பிடித்த இளவரசன் போய் விட்டதால் சிம்மாசனத்துக்கு ஆள் இல்லை என்று நீங்கள் வருந்த வேண்டாம். இந்த நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு மகனும் அரசமகன்தான். ஒவ்வோர் இளைஞனும் இளவரசன்தான். ஒவ்வொருவருக்கும் இந்த சிம்மாசனத்தில் அமரக்கூடிய தகுதி இருக்கின்றது என்றார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங், தனது மகன் ஜூனியர் மார்ட்டின் லூத்தர் கிங்கிடம் அடிக்கடி சொல்வாராம் : ''கடைசி வரை நீ உன் உரிமைக்காகப் போராடலாம். ஆனால், நீ யாரிடம் போராடுகிறாயோ, அவர்களை எதிரியாகக் கருதாதே. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் மீது வெறுப்பு இல்லாமல் போராடு. காரணம், உன் எதிரி அவன் மட்டுமல்ல... காலம்காலமாக இதுவரை வாழ்ந்த வெள்ளையர்களும் இனி வருங்காலத்தில் வரப்போகும் வெள்ளையர்களும்தான். உன் எதிரி அத்தனை கோடிப் பேரும்தான். அதனால் ஒரு தனி நபர் மீது நீ படும் கோபம், ஒருக்காலும் உன்னை இறுதி வெற்றிக்கு அழைத்துச் செல்லாது. இது சாத்தியம் இல்லை எனத் தோன்றலாம். ஆனால், ஒருமுறை நீ வெறுப்பு இல்லாமல் உன் போராட்டத்தை உறுதியுடன் நடத்துவாயானால் வெற்றியின் நிழலைக் கண்கூடாகக் காண்பாய். மேலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயமும் உண்மையும் நம் பக்கம் இருக்க வேண்டும். அது மட்டுமே நம்மை எக்காலத்திலும் வெற்றியோடு கொண்டுநிறுத்தும்!'' .

ஆம். இன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் ஆப்ரிக்க அமெரிக்க கலப்பினத்தவர் ஒருவர் அரசுத்தலைவராக ஆட்சி நடத்துகின்றார் என்றால் அந்நாட்டில் மார்ட்டின் லூத்தர் கிங்கும் அவரைப் பின்பற்றியவர்களும் நடத்திய நீதிக்கான எழுச்சிதானே காரணம். ஆம். நீதிக்காக, உரிமைக்காகப் போராடுகிறவர்களிடம் எல்லா நேரங்களிலும் நியாயமும் உண்மையும், அப்பழுக்குஇல்லாத தன்மையும் இருக்க வேண்டும். அது மட்டுமே அவர்களை எக்காலத்திலும் வெற்றியோடு கொண்டு நிறுத்தும். ஒரு பெரியவர் சொன்னார்:''வெளித் தோற்றத்தில் அப்பழுக்குஇல்லாமல் காட்சி தரும் வாழ்க்கையை உருவாக்கவே மக்கள் முனைகின்றனர். ஆனால், வாழ்க்கையின் தரமோ அகத்தூய்மையால்தான் நிர்ணயிக்கப்படுகிறது!'' என்று. நமது திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், “கடவுளின் பராமரிப்பு, நன்மை செய்பவர்கள் மற்றும் நீதிக்காகத் தங்களையே அர்ப்பணிப்பவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்கின்றது, தங்களை மட்டுமல்ல, தங்களைவிட மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நினைப்பவர்களுக்கும் கடவுள் உதவி செய்கின்றார்” என்று விசுவாசிகளைத் தேற்றினார். RealAudioMP3

ஹம்மாஸ் என்ற ஆப்ரிக்க நீதிபதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அரசிடமிருந்து ஊதியமே வாங்காமல் வேலை செய்தவர். இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதி அதிலிருந்து கிடைத்த பணத்தைக் குடும்பச் செலவுக்கு வைத்துக் கொண்டார். வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது. வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு வேலையைச் செய்தனர். ஆற்றுக்குப் போய்த் தினமும் குடத்தில் தண்ணீர் எடுத்துவர வேண்டியது இவரது வேலை. மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார். ஒருநாள் அந்த ஊரில் ஆடுமாடு மேய்க்கும் ஆள் ஒருவருக்கு ஆடுகள் புல்வெளியில் மேயும் போது உட்கார்ந்து அவற்றைக் கவனிப்பதற்கு நிழலான ஓர் இடம் தேவைப்பட்டது. எனவே தன்னுடைய நண்பனின் வீட்டையொட்டி ஒரு குடிசை போட விரும்பினார். ஆனால் அவரது நண்பன் அதற்கு அனுமதி தரவில்லை. இருவருக்குமிடையே தகராறு வந்தது. சரி. நமது நீதிபதியிடம் கேட்போம் என்று நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். வழியில் ஒருவர் தண்ணீர் குடத்தைச் சுமந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஐயா, இந்த ஊர் நீதிபதியை இதுவரை நாங்கள் பார்த்தில்லை. அவரைப் பார்க்கணும், அவர் எங்கே இருப்பார் என்று கேட்டனர். உடனே அவர், நான்தான் அந்த நீதிபதி. உங்களுக்கு என்ன பிரச்சனை என்றார். ஐயா, எங்க பிரச்சனையைச் சொல்றோம். ஆனா, நீங்க குடத்தைச் சுமந்துகிட்டு நிக்கிறீங்க, அதைக் கொஞ்சம் கீழே இறக்கி வையுங்க, அப்புறமா நிதானமா நாங்க சொல்றதைக் கேளுங்க என்றனர். அதற்கு அந்த நீதிபதி, இது மக்கள் நடந்து போகும் நடைபாதை. இந்தக் குடத்தைக் கீழே இறக்கி வைத்து இந்த வழியாய்ப் போகும் மக்களுக்கு இடைஞ்சல் தர நான் விரும்பவில்லை. அதனால் இது என்கிட்டே இருக்கட்டும், நீங்கள் சொல்லுங்கள் என்றார். அதற்கு அவர்கள், சரிங்க ஐயா, நாங்க போயிட்டு வர்றோம் என்று இரண்டு பேரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். என்னங்க பிரச்சனையைச் சொல்லாமே போறீங்களே என்று நீதிபதி கேட்டதற்கு, ஐயா, நீங்க தீர்ப்புச் சொல்லீட்டீங்க என்றார்கள்.

அன்பர்களே, தனது கையில் இருக்கும் குடத்தையே தரையில் வைக்க விரும்பாத அந்த நீதிபதி, நடைபாதையில் குடிசை போடுவதை சரி என்று எப்படி ஒத்துக் கொள்வார் என்று அவர்கள் நினைத்தது சரிதானே. நிதி வாங்கிக் கொண்டு நீதிக்குக் குழி தோண்டும் நீதிபதிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நீதிபதி. மார்ட்டின் லூத்தர் கிங் கூறியது போல, எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயமும் உண்மையும் நம் பக்கம் இருக்க வேண்டும். அது மட்டுமே நம்மை எக்காலத்திலும் வெற்றியோடு கொண்டு நிறுத்தும்!'' .

அன்பர்களே, நம் அனைவரது வாழ்க்கையிலும் எல்லா நேரங்களிலும் நியாயமும் உண்மையும், அப்பழுக்குஇல்லாத தன்மையும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது நீதிக்கான போராட்டங்கள் வெற்றியடையும். நீதி தவறாமல் பதிதனிலே நாம் நிலைபேறு காண வேண்டும், அல்லல் தினம் காணும் நெஞ்சம்எல்லாம் அமைதி அடைய ஒரு வரம் வேண்டும், நம் இன்னல் பல எல்லாம் சன்னல் வழி ஓட கண்ணில் அருள் வேண்டும், கள்ளம் இல்லாத மனம் வேண்டும், சலிப்பே இல்லாமல் இனிப்பாக இவ்வுலகில் களிப்புற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தணை செய்வோம். ஏனெனில் அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நீதியானவை என்று வேதம் சொல்கிறது.








All the contents on this site are copyrighted ©.