2009-07-20 15:43:03

திருத்தந்தை : “கடவுளின் பராமரிப்பு, நன்மை செய்பவர்கள் மற்றும் நீதிக்காகத் தங்களையே அர்ப்பணிப்பவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்கின்றது,


ஜூலை20,2009. பொருளாதார நெருக்கடிகளால் ஏற்படும் துன்பங்களுக்கு மத்தியிலும் மனித வாழ்வு மற்றும் குடும்பத்தை மதிப்பது போன்ற நற்செய்தி விழுமியங்களை வாழ்கிறவர்களுக்குத் தேவையான சக்தி இறைவனிடமிருந்து வருகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.வட இத்தாலியின் அவோஸ்தா மலைப்பகுதியில் லெ கோம்ப்ஸ் என்ற ஊரில் கோடை விடுமுறையை செலவழித்து வரும் திருத்தந்தை, ஞாயிறன்று ரொமானோ கனவேசேக்கு ஹெலிகாப்டரில் சென்று அவ்வூர் விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை நிகழ்த்திய போது இவ்வாறு கூறினார்.திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனையின் பிறப்பிடமான இவ்வூர் அமைந்துள்ள பகுதி மக்களின் கிறிஸ்தவப் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிட்டு தொடக்க காலத்தில் இப்பகுதி மறைசாட்சிகளின் இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டது என்றும் கூறினார் அவர். இம்மறைசாட்சிகளில் புனித சொலுத்தோரே பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இதுவரை இவரைப் பற்றித் தனக்குத் தெரியாது, ஆயினும் புதிய புனிதர்கள் பற்றி அறிந்து கொள்வதில் தனக்கு எப்பொழுதும் ஆர்வம் உண்டு என்றும் கூறினார்.அவ்வூர் மக்கள் நீண்ட காலமாக ஆழமான விசுவாசம் மற்றும் கடின உழைப்பைக் கொண்டிருந்தாலும் தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளால் வேலைகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்றும் கூறினார் பாப்பிறை.அன்பு நண்பர்களே, தைரியம் இழக்க வேண்டாம் என்று தொடர்ந்து உரையாற்றிய திருத்தந்தை, “கடவுளின் பராமரிப்பு, நன்மை செய்பவர்கள் மற்றும் நீதிக்காகத் தங்களையே அர்ப்பணிப்பவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்கின்றது, தங்களை மட்டுமல்ல, தங்களைவிட மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நினைப்பவர்களுக்கும் கடவுள் உதவி செய்கின்றார் என்று கூறினார்.

இளையோர் நற்செய்தி மற்றும் உண்மையான சுதந்திர வழிகளையும் பின்பற்றி நடக்குமாறும் வலியுறுத்திய திருத்தந்தை இளமை, வளமை நிரம்பிய காலம், உண்மை மற்றும் வாழ்வின் நிறைவைப் பெறுவதற்கானப் பாதையைக் கண்டு பிடிப்பதற்கும் மாயத்தோற்றங்களின் எளிதான வழிகளைப் பின்செல்லும் சோதனைகளை மேற்கொள்ளவும் இளையோர் கற்றுக் கொடுக்கப்படுமாறும் கேட்டுக் கொண்டார்.



 








All the contents on this site are copyrighted ©.