2009-07-18 12:44:30

வழிபாட்டு ஆண்டின் 16 ஆம் ஞாயிறு. மறையுரை. 180709 .


இன்றைய நற்செய்தியை நமக்கு வழங்குவது தூய மாற்கு .



அமெரிக்கக் கறுப்பு நிறத்தவர் விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமானவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர் .

கோடிக்கணக்கான கறுப்பு நிற அமெரிக்கரின் தலைவராக இருந்தார் மார்ட்டின் லூத்தர் கிங் . அவருக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வர ஆரம்பித்தன . அவரை அச்சம் மேற்கொண்டது . நடுங்கினார் . அவ்வேளையில் அவர் செபிக்க ஆரம்பித்தார் . அவர் இவ்வாறு செபித்தார் .

இறைவா என் மனச்சாட்சிக்கு நல்லது எனப்படுவதை நான் செய்கிறேன் . கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறேன் . ஆனால் நான் இப்போது மிகவும் அஞ்சுகிறேன் . மக்கள் நான் அவர்களுக்குத் தலைமை தாங்கி போராட்டத்தை நடத்த விரும்புகிறார்கள் . நான் பயப்படுவதாகத் தெரிந்தால் அவர்களும் பயப்படுவார்கள் . நான் நம்பிக்கையின் இறுதி எல்லைக்கே வந்துவிட்டேன் . எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . இந்தப் பொறுப்பை நான் மட்டும் தனியே செய்யமுடியாது எனச் செபித்தார் .

அவரது செபத்தில் முக்கியமான வாசகம் என்னவென்றால் மக்கள் நான் தலைமை தாங்கி வழிநடத்த விரும்புகிறார்கள். நான் பயப்படுவதாகத் தெரிந்தால் அவர்களும் பயந்துவிடுவார்கள் . இன்றை நற்செய்தி கூறுவது போல அவர்கள் ஆயனில்லாத ஆடுகள் போல இருப்பார்கள் .



ஒவ்வொரு பங்குத்தந்தையும் , ஒவ்வொரு ஆசிரியரும் , ஒவ்வொரு பெற்றோரும் மார்ட்டின் லூத்தர் கிங்குடைய வார்த்தைகளை நெஞ்சில் கொண்டுதான் செயல்புரிகின்றார்கள் .

வாழ்வின் சில கட்டங்களில் நாம் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருக்கும்போது நம்மையும் அச்சம் துன்புறுத்தலாம் . வாழ்வின் சில கட்டங்களில் நம்மால் நம்முடைய சுமையைத் தாங்கமுடியாது தவிக்கலாம் . சில துன்ப வேதனையில் நாமும் இயேசு பூங்காவனத்தில் செபித்தது போல தந்தையே நீர் விரும்பினால் இந்தத் துன்பக்கலத்தை என்னிடமிருந்து அகலச்செய்யும் எனச் செபிக்கத் தோன்றலாம் . லூக்கா 26 ,39 .

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாம் என்ன செய்யலாம் .



நாமும் இயேசு செய்ததுபோல , மார்ட்டின் லூத்தர் கிங் செய்தது போல செய்ய வேண்டும் . எப்போதும் கிறிஸ்தவர்கள் செய்வதுபோல நாமும் கடவுளிடம் திரும்பி மன்றாடவேண்டும் . தாம் சிறைப்படுவதற்கு முன்னர் பூங்காவனத்தில் செபித்த இயேசுவுக்கு வானதூதர்கள் தோன்றி ஊக்கமளித்ததாக நாம் தூய லூக்கா நற்செய்தியில் காண்கிறோம் . லூக்கா 22, 43 .

மார்ட்டின் லூத்தர் கிங் செபித்த பிறகு அவருக்கு அச்சம் நீங்கி கடவுளின் அருள் பிரசன்னம் நிறைந்து மிகத் துணிச்சலோடு இருந்ததாகக் கூறுகிறார் .

நமக்கு நல்லதொரு பாடம் இன்று தரப்படுகிறது . நாம் வாழ்க்கையில் சோதனையாலும் வேதனையாலும் அலைக்கழிக்கப்படும்போது இயேசு செய்ததுபோல , மார்ட்டின் லூத்தர் கிங் செய்ததுபோல நாமும் வானகத் தந்தையிடம் செபிக்கவேண்டும் .

இயேசுவினுடையவும் அவருடைய சீடருடையவும் இருமுனை வாழ்வை நாம் இன்று காண்கிறோம் . இயேசுவுக்குச் செபம் தேவை . செபம் செய்த இயேசுவுக்கு செயல் கடமை . செபமும் செயலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அமைந்து இயேசுவினுடைய வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன . ஆசான் வழியே மாணவன் என்பதை உணர்வோமா .



திருத்தூதரும் சரி , இயேசுவும் சரி நாள் முழுவதும் நற்செய்தியைப் போதிப்பதில் ஈடுபட்டனர் . அதே வேளையில் போதனையே போதும் செயலே எல்லாம் என்ற நிலையிலே அவர்கள் அமைந்துவிடவில்லை . தனிமையான இடத்துக்கு இயேசு சீடர்களை அழைத்துச் சென்றார் என நாம் வாசகத்தில் இரண்டு இடத்தில் காண்கிறோம் . தனிமையாகச் செல்வது என்பது நற்செய்தியில் ஓய்வு எடுப்பதையும் , செபம் செய்யச் செல்வதையும் குறிக்கும் . இரவில் மலைக்குச் சென்று இயேசு செபிப்பதை நற்செய்தி பல இடங்களில் கூறுகிறது .இயேசு செபத்தின் இன்றியமையாமையை உணர்ந்தவர் .எனவே தான் சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் என்றார் . கேளுங்கள் , உங்களுக்குக் கொடுக்கப்படும் என்றார். திருத்தூதர் பவுலும் இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்றார் . நாம் கற்பனை செய்வதற்கு மேலானவையெல்லாம் செபம் பெற்றுத் தருகிறது என்பதை உணர்வோம் . உணர்ந்து நமது தேவைக்காக பிறரின் தேவைகளுக்காக நாட்டின் நலனுக்காக செபிப்போம் .

இயேசுவும் அவரது சீடர்களும் உண்பதற்குக் கூட நேரமில்லாது நற்செய்தியைப் போதித்தனர் . நோயுற்றோரைக் குணப்படுத்தினர். பசியால் வருந்தியோருக்கு உணவளித்தனர் .தம்மைப் பின்பற்றிய கூட்டம் ஆயனில்லா ஆடுகள் போலிருந்ததால் அவர்கள்மீது மனமிரங்கி நெடுநேரம் இயேசு போதித்ததாகக் காண்கிறோம் . ஓய்வு தேடிய இயேசு ஓய்வைத்தள்ளிவிட்டுச் செயல்படுவதைக் காண்கிறோம் .

மனமிரங்கினார் என்பதற்கு குலை நடுங்கினார் என்பது அடிப்பொருளாகும் . பிறர் துன்பங்கண்டு இயேசு குலை நடுங்கியதுபோல பிறர் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சம் உருகுதையா என்று நாம் கூறமுடியுமா . செயல் வாழ்வுதான் நம் செப வாழ்வு . நம் வாழ்வில் செபமும் அன்புச் செயல்களும் ஒன்றுபட்டு நடக்கும் முறையிலே நம் நடத்தையை நாம் அமைப்போமா .

செபம் மட்டுமே நம் வாழ்வை ஆக்கிரமிக்கும்போது நாம் செத்ததவர்கள் ஆகிறோம் . செயல் மட்டுமே நம்மை ஆக்கிரமிக்கும்போது நாம் வெறும் எந்திரங்களாக மாறி விடுகிறோம் . எனவே அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே நம்மை ஆட்கொள்ளட்டும் . நம்மைச் சோதனைகளும் வேதனைகளும் புயலாகத் தாக்கும்போது நாம் செபிக்க வேண்டும் . அவ்வாறு நாம் செய்யும்போது கடவுள் நம் நெஞ்சுக்கு உறுதியளிப்பார் .

நாம் திருப்பாடல் 23 ஐ செபிப்போமா .

ஆண்டவரே என் ஆயர் . எனக்கேதும் குறையில்லை .பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார் . அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார் .

மேலும் சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன் .

என் வாழ்நாள் எல்லாம் உம் அருளும் பேரன்பும் எனைப்புடை சூழ்ந்துவரும் . நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன் .








All the contents on this site are copyrighted ©.