2009-07-15 15:18:22

சந்தால் பூர்வீக இனமக்களின் சமஉரிமைப் போராட்டத்திற்கு பங்களாதேஷ் தலத்திருச்சபை ஆதரவு


ஜூலை15,2009 தங்களின் சம உரிமைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான சந்தால் பூர்வீக இனமக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது பங்களாதேஷ் தலத்திருச்சபை.

பிரித்தானிய காலனி ஆட்சிக்கு எதிராக எழுந்த சந்தால் புரட்சியின் 154ம் ஆண்டு கொண்டாட்டங்கள் தினாஜ்பூர் புனித பிரான்சிஸ் அசிசி ஆலயத்தில் அண்மையில் சிறப்பிக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்ட தினாஜ்பூர் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவை, சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் கலாச்சாரத்தைக் காப்பதற்கான திருச்சபையின் அர்ப்பணிப்பிற்கும் உறுதி அளித்தது.

பூர்வீக மக்களின் வரலாறு, கலாச்சாரம், சட்டரீதியான உரிமைகள் போன்றவை பற்றி வருங்காலத் தலைமுறைகளுக்கு நன்றாகக் கற்றுக் கொடுக்கப்படாவிடில் புரட்சிகள் தொடரும் என்றும் அவ்விழாவில் கூறப்பட்டது.

பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் போது சமஉரிமை கேட்டு, சந்தால் இனத்தலைவர்களான சிது மூர்மு மற்றும் அவரது சகோதரர் கான்ஹூ, பத்தாயிரம் பேருடன் 154 ஆண்டுகளுக்கு முன்னர் கிளர்ச்சியைத் தொடங்கினர். அதற்கு முதலில் வெற்றி கிடைத்தாலும் பின்னர் அம்மக்கள் அடக்கி வைக்கப்பட்டனர்.

பங்களாதேஷிலுள்ள 2 இலட்சத்து 25 ஆயிரம் சந்தால் இன மக்களில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் கிறிஸ்தவர்கள். இவர்களில் 70 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.