2009-07-15 15:15:08

எல் சால்வதோரில் கானடா பசிபிக் ரிம் நிறுவனத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கானடா ஆயர்கள் ஆதரவு


ஜூலை15,2009. எல் சால்வதோர் நாட்டில் சுரங்கத் தொழிற்சாலை நடத்தும் கானடா நாட்டு பசிபிக் ரிம் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்திற்குக் கடும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று கானடா ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோர் ஆயர் பேரவை மற்றும் தலைநகர் சான் சால்வதோர் பேராயர் மூலம் தாங்கள் இத்தகவலைப் பெற்றதாக, கானடா வெளியுறவுத் துறை அமைச்சர் இலாரன்ஸ் கானனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர் கானடா ஆயர்கள்.

வெள்ளி மற்றும் தங்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கு சையனைடு பயன்படுத்துவது கடும் நலவாழ்வுப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும், இதற்கெனப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மாசுபடுத்தப்படுவதால் அந்நாட்டு மையப்பகுதியின் நீர்வள அமைப்பு அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது எனவும் ஆயர்களின் கடிதம் கூறுகிறது.

தண்ணீர் மாசுபடுதல், வேளாண்மை, வீட்டு விலங்குகளின் பாதுகாப்பு, மீன்பிடி தொழில் என அனைத்தும் கடுமையாய்ப் பாதிக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள கானடா ஆயர்கள், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களில் பசிபிக் ரிம் நிறுவனம் சர்வதேச விதிமுறைகளை மதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.