2009-07-15 15:17:25

உலகளாவிய வளர்ச்சி மற்றும் மனிதரின் சிந்தனைப் போக்கில் மாற்றத்திற்கு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தையின் தைரியம் பாராட்டுக்குரியது


ஜூலை15,2009 கருணைக்கொலை, ஓரினச்சேர்க்கை தம்பதியர் குழந்தைகளைத் தத்தெடுத்தல், ஊடகத்துறைக்கும் திருச்சபைக்குமிடையேயான உறவு போன்ற சில தற்போதைய பிரச்சனைகள் குறித்த தங்கள் கவலையை வெளியிட்டது ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு.

உக்ரேய்ன் நாட்டு லிவ்வில் இத்திங்களன்று 5 நாள் கூட்டத்தை நிறைவு செய்த ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலர்கள், மனித மாண்பைக் காயப்படுத்தும் தற்போதைய சில விவகாரங்கள் குறித்து விவாதித்த போது உலகளாவிய வளர்ச்சி, குருத்துவம் போன்றவை பற்றியும் கருத்து தெரிவித்தனர்.

திருத்தந்தையின் புதிய அப்போஸ்தலிக்க சுற்றுமடல், பொருளாதார மறுசீரமைப்புக்கு உலகஅளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றுரைத்த ஜெர்மன் ஆயர் பேரவைச் செயலர் இயேசு சபை அருட்தந்தை ஹான்ஸ் லான்ஜென்டோர்பெர், ஐரோப்பிய பொருளாதாரம் ஆப்ரிக்காவையும் ஆசியாவையும் புறக்கணிக்கக் கூடாது என்றார்.

உலகளாவிய வளர்ச்சி மற்றும் மனிதரின் சிந்தனைப் போக்கில் மாற்றத்திற்கு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தையின் தைரியத்தையும் அக்குரு பாராட்டியுள்ளார்.

இத்தாலியில் 17 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து கடந்த பிப்ரவரியில் இறந்த எலுவாநா எங்கிலாரோ பற்றியும் 2011ம் ஆண்டு ஸ்பெயினின் மத்ரித்தில் நடைபெறவுள்ள உலக இளையோர் மாநாடு பற்றியும் அவர்கள் பேசினர்

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலர்களின் அடுத்த கூட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 10 முதல் 13 வரை உரோமையில் நடைபெறும் எனவும் தற்போதைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



 








All the contents on this site are copyrighted ©.