2009-07-14 14:45:37

இராக்கில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படுவது குறித்து திருத்தந்தை கவலை


ஜூலை14,2009. இராக்கில் தொடங்கியுள்ள கிறிஸ்தவ ஆலயங்களுக்கெதிரான புதிய தாக்குதல்களுக்கு தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த அதேவேளை, அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்குவிப்பதற்குத் தாமதமின்றிச் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கையெழுத்திட்டு பாக்தாத் பேராயர் கர்தினால் மூன்றாம் இம்மானுவேல் டெலிக்கு அனுப்பிய தந்திச் செய்தியில் பாக்தாத் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தோடாக்ஸ் சமூகங்களுடனான திருத்தந்தையின் செபமும் ஆன்மீக ஒருமைப்பாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத்தின் கிழக்கிலுள்ள பாத்திமா அன்னை ஆலயத்துக்கருகில் இத்திங்கள் காலை இடம் பெற்ற குண்டுவெடிப்பு உட்பட இந்தச் சனிக்கிழமை மற்றும் ஞாயிறிலிருந்து இதுவரை கல்தேய மற்றும் ஆர்த்தோடாக்ஸ் ஆலயங்களில் ஏழுமுறை குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இத்தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

இராக்கில் கிறிஸ்தவர்க்கெதிராகத் தொடர்ந்து இடம் பெறும் வன்முறையால் சுமார் இரண்டு இலட்சம் கிறிஸ்தவர்கள் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் மற்றும் சுமார் ஐம்பதாயிரம் பேர் வடஇராக்கில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

2003ம் ஆண்டில் 10 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்சமயம் நான்கு இலட்சத்தைவிட குறைந்துள்ளது எனச் சொல்லப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.