2009-07-11 15:42:12

வளர்ந்து வரும் நாடுகளில், உணவு உற்பத்தியை ஊக்கப்படுத்த ஜி-8 நாடுகளின் தலைவர்கள் உறுதி


ஜூலை11,2009 வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவில், உணவு உற்பத்தியை ஊக்கப்படுத்த இரண்டாயிரம் கோடி டாலர்களை வழங்க முன்வந்துள்ளனர் ஜி-8 நாடுகளின் தலைவர்கள்.

இத்தாலியில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்துள்ள ஜி-8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் உறுதி வழங்கப்பட்ட அந்தப் பணம் உலகில் பசியால் வாடும் அனைவருக்கும் உதவ போதாது என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் தலைவரான ஜாக் டியூப் கூறியுள்ளார்.

அதேசமயம், உணவுக்கான உதவி என்பதில் இருந்து விவசாயத்துறையில் முதலீடு என்ற நிலைக்கு, கொள்கை மாற்றம் இடம்பெற்றுள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜி-8 நாடுகள் தருவதாக கூறியிருந்த பணத்தில் இன்னமும் இரண்டாயிரம் கோடிக்கும் அதிகமான டாலர்கள் வந்து சேரவில்லை என்று உதவி நிறுவனங்கள் கூறியிருக்கும் நிலையில், இப்போது புதிதாக எவ்வளவு பணம் வழங்கப்படும் என்று தெரியவில்லை என ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.