2009-07-11 15:36:11

கானடா பிரதமர், திருத்தந்தை சந்திப்பு


ஜூலை11,2009. இன்று கானடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையுடன் இருபது நிமிடங்கள் தனியாக இடம் பெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனை மற்றும் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தியையும் சந்தித்தார் பிரதமர் ஹார்ப்பர்.

காரித்தாஸ் இன் வெரித்தாத்தே என்ற திருத்தந்தையின் புதிய திருமடலின் ஒளியில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவை, அம்மாநாட்டின் விளைவுகள், குறிப்பாக பொருளாதார-நிதி நெருக்கடிகள், வளரும் நாடுகளுக்கு குறிப்பாக ஆப்ரிக்காவுக்கான உதவி, வெப்பநிலை மாற்றங்கள், ஆயுதக்களைவு, அணுஆயுதங்களை அகற்றல், மத்திய கிழக்குப் பகுதியின் அமைதி, சமய சுதந்திரம், போன்ற சர்வதேச அளவிலான விவகாரங்களும் கனடாவைப் பொறுத்த வரையில் திருமணம், குடும்ப வாழ்வு, நன்னெறி விழுமியங்கள் போன்ற விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம் பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

பின்னர் பிரதமரின் மனைவி லௌரீன் ஹார்ப்பர், பிள்ளைகள் பென், ராக்கேல் ஆகியோரும் திருத்தந்தையை சந்தித்தனர்

ஜி-8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னும் பின்னும் அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான், தென் கொரியா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே திருத்தந்தையைச் சந்தித்துள்ளனர்.












All the contents on this site are copyrighted ©.