2009-07-11 12:34:33

ஆண்டின் 15 ஆவது ஞாயிறு . மறையுரை .120709.


இன்றைய நற்செய்தியை நமக்கு வழங்குவது தூய மாற்கு .

அதிகாரம் 6, திருவசனங்கள் 7 – 13 .



பிரான்சிஸ் அசிசி இத்தாலியின் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். காளைப் பருவத்தில் அவர் ஓர் ஊதாரியாகத் திரிந்தார். பணத்தையெல்லாம் தம் நண்பர்களுடைய களியாட்டத்துக்குச் செலவிட்டார் . 1202 ஆம் ஆண்டு இத்தாலியின் பெரூஜியா நகருக்கும் அசிசி நகருக்குமிடையே போர் தொடங்கியது . அசிசியின் படையில் சேர்ந்த பிரான்சிஸ் போருக்குச் சென்றார் . போர்க்கைதியாகப் பிடிபட்ட பிரான்சிஸ் விலங்கிடப்பட்டு கடுமையான சிறை வாழ்வைச் சந்தித்தார் .

விடுவிக்கப்பட்ட பிறகு பிரான்சிஸ் மீண்டும் உடல் நலம்பெற ஓராண்டுக்கும் மேலாகியது . சிறை வாழ்வும் ஓராண்டு உடல் நலமின்றி இருந்ததும் அவர் வாழ்வில் மனமாற்றத்தைக் கொண்டு வந்தன . தனது விலையுயர்ந்த ஆடைகளுக்குப் பதிலாக ஏழ்மையான ஆடைகளை உடுத்த ஆரம்பித்தார் . அவரது மேலாடையின் பின்புறம் சிலுவை அடையாளத்தை வரைந்து கொண்டார் .

பின்னர் அவர் தம் வீட்டைத் துறந்து துறவற வாழ்வை மேற்கொண்டார் . அசிசிக்கு வெளியே கோவிலடியில் தங்கி வாழ்ந்து வந்தார் . அங்கு பல மணி நேரம் செபத்தில் செலவழித்தார் . பிரான்சிஸ் ஒதுக்கப்பட்டவர்கள்மீதும் சமுதாயத்தில் ஓரம் கட்டப்பட்டவர்கள்மீதும் தனிக் கவனமும் ஆர்வமும் கொண்டார் .



விவிலியத்தின் முதல் நூலில் மனிதர் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டதாகக் காண்கிறோம் . தூய மத்தேயு நற்செய்தியில் பிறருக்கு நாம் செய்யும் உதவியெல்லாம் இயேசுவுக்கே செய்வது என நாம் அறிகிறோம் .

இந்த வேத வாக்குகளை பிரான்சிஸ் பின்பற்றத் தொடங்கினார் . அவர் ஒரு நாள் வயல்வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார் . வழியில் ஒரு தொழு நோயாளியைக் கண்டார் . தொழுநோய் பற்றி பிரான்சிஸ் அதிகம் பயம் கொண்டிருந்தாலும் பாவப்பட்ட அந்த தொழுநோயாளியைச் சந்தித்து அணைத்து முத்தமிட்டார் . அதேபோல பிரான்சிஸ் திருப்பலிபூசையில் பங்கேற்றபோது நாம் இன்று வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசிக்கப்பட்டது . இயேசு பயணத்துக்கு எதுவும் கொண்டு செல்லவேண்டாம் , பணமோ , பையோ வேண்டாம் என அறிவுறுத்தியது பிரான்சிஸ் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது .

இதற்குப் பிறகு பிரான்சிஸ் தனித்திருந்து செபிப்பதை விடுத்து ஏழையாக வறுமையில் நகரத்திலும் கிராமத்திலும் மறைப்பணி செய்து நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார் . அவரது வாழ்க்கை நெறி பலரை அவரைப் பின் தொடரத்தூண்டியது . முதல் பிரான்சிஸ் சபைத்துறவியர் நோயுற்றோருக்கு உதவுவதிலும் ஏழைகளைப் பராமரிப்பதிலும் தம் பணியைத் தொடங்கினர் . வானமே கூரையாக தங்களுக்குக் கிடைத்ததை உண்டு வெட்டவெளியில் படுத்துறங்கினர். அத்துறவியரின் எண்ணிக்கை பெருகியதால் 27 வயதில் பிரான்சிஸ் ஒரு துறவற சபையைத் தொடங்கினார் . அந்தப் புதிய துறவு சபை ஏழைகளாக வாழ்ந்து ஏழைகளுக்கு உதவுவதில் மும்முரமாக செயல்பட்டது . ஆன்மீக கருத்துக்காக அவர்கள் ஏழ்மையாக வாழ்ந்து ஏழைகளின் பங்காளர் ஆயினர் .

ஏசுவைப்போல அன்னை தெரசாவும் அசிசி பிரான்சிசும் வறுமையில் வாடியோர்க்கு அநாதைகளுக்கு சேவை புரிந்து வந்தனர் . வறுமையின் ஆணிவேரைக் களைவதை அரசியலாரின் பொறுப்புக்கு விட்டுவிட்டனர் .

மனிதர்கள் பலவிதம் . ஒவ்வொருவருக்கும் கடவுள் தனித்தனி அழைப்பைக் கொடுக்கிறார். கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய மடலில் திருத்தூதர் பவுல் இவ்வாறு எழுதியுள்ளார் –

அருள் கொடைகள் பலவகையுண்டு . ஆனால் தூய ஆவியார் ஒருவரே . திருத்தொண்டுகளும் பல வகையுண்டு .ஆனால் ஆண்டவர் ஒருவரே . செயல்பாடுகள் பலவகையுண்டு . ஆனால் கடவுள் ஒருவரே . அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர் . பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது .

இன்றைய உலகில் முற்காலத்தைவிட பிரான்சிஸ் , அன்னை தெரசா செய்ததைப்போல ஏழைகளுக்கு நமது உதவி தேவை . நாம் ஏழைகளுக்கு உதவுவதிலிருந்து சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிக்க முடியாது . வறியவர்களுக்கு உதவுவதற்கு நாம் தயாராக வேண்டும் .

இயேசு அவர்களுக்கு உதவினார் . பிரான்சிஸ் ஏழைகளுக்கு உதவினார் . அன்னை தெரசா வறியோருக்காகவே வாழ்ந்தார் . நாமும் அவ்வாறே வாழமுடியும் .

இன்றைய நற்செய்தியின் கருத்து நமக்குத் தெளிவாகப் புரியும் . நாம் அனைவருமே நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறோம் . நற்செய்தியை அறிவிப்பது என்பது நற்செய்திப்படி வாழ்வதாகும் . தூய பிரான்சிஸ் , அன்னை தெரசாவின் வாழ்வு முறைகளைப் பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும் .



அன்னை தெரசாவும் பிரான்சிஸ் அசிசியும் வசதியான வாழ்க்கையிலிருந்து தங்களையே கடவுளின் ஏழைகளுக்காக ஏழைகளானவர்கள் . அதனால் தான் அன்னை தெரசா தூய பிரான்சிஸ் கற்பித்த செபத்தை தமது துறவு மடத்தின் முக்கிய செபமாக சொல்லச் சொன்னார் .

1979 ஆம் ஆண்டு நார்வேயின் ஆஸ்லோவில் அன்னை தெரசாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது தூய பிரான்சிஸ் தந்த அமைதிக்கான செபத்தை அன்னை தெரசா சொல்லியதில் வியப்பேதுமில்லை .

நாமும் இந்தச் செபத்தில் பங்கேற்போம்.

ஆண்டவா

என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும் . வெறுப்பு உள்ள இடத்தில் அன்பையும் , மனவருத்தம் உள்ள இடத்தில் மன்னிப்பையும் , ஐயமுள்ள இடத்தில் விசுவாசத்தையும் , அவநம்பிக்கையுள்ள இடத்தில் நம்பிக்கையையும் , இருள் உள்ள இடத்தில் ஒளியையும் துன்பம் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும் நான் விதைத்திட அருள்புரியும் .

ஓ தெய்வீகக் குருவே

ஆறுதல் தேடுவதைவிட ஆறுதல் அளிக்கவும் , பிறரால் புரிந்து கொள்ளப்படுவதைவிட பிறரைப் புரிந்துகொள்ளவும் , அன்பு செய்யப்படுவதைவிட அன்பு செய்யவும் நான் நாட எனக்கு அருள் புரியும் .

ஏனெனில் தருவதில் நாங்கள் பெறுகின்றோம் . மன்னிப்பதில்தான் மன்னிக்கப்படுகின்றோம் . மரிப்பதில்தான் முடிவில்லா வாழ்வுக்குப் பிறக்கின்றோம் . இந்த வரங்களை எங்களுக்குத் தந்தருளும் இறைவா .ஆமென் .








All the contents on this site are copyrighted ©.