2009-07-09 15:39:58

எக்லேசியா தேய் திருப்பீட ஆணையம் விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தோடு இணைப்பு


ஜூலை09,2009 எக்லேசியா தேய் என்ற திருப்பீட ஆணையத்தின் இறையியல் கோட்பாட்டு உரையாடல் பணிக்கு உதவும் நோக்கத்தில் அந்த ஆணையத்தை விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தோடு இணைத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

“அவரது சொந்த முயற்சியின் பேரில்” என்ற பொருள் கொண்ட “மோட்டு புரோபிரியோ” என்ற கடிதத்தின் மூலம் இதனைச் செய்துள்ளார் திருத்தந்தை.

“எக்லேசியெ ஊனித்தாத்தெம்” என்ற தலைப்பிலான கடிதம் மூலம் இந்த மாற்றத்தைச் செய்துள்ள திருத்தந்தை, எக்லேசியா தேய் ஆணையத்தின் தலைவராக, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயத் தலைவரான கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாடா வை நியமித்துள்ளார்.

எக்லேசியா தேய் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் தாரியோ காஸ்ட்ரிலோன் ஹோயோஸ், கடந்த சனிக்கிழமையன்று தனது 80 வயதை எட்டியதை முன்னிட்டு அவரது பணி ஓய்வை ஏற்று அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இன்னும், எக்லேசியா தேய் ஆணையத்தின் செயலராக பேரருட்திரு குய்தோ போட்சோ வையும் நியமித்துள்ளார் திருத்தந்தை.

கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்ட பேராயர் Marcel Lefebvre யால் உருவாக்கப்பட்ட புனித பத்தாம் பத்திநாதர் கழகம் அல்லது அதைப் போன்ற அமைப்புகளிலிருந்து மீண்டும் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைய விரும்பும் குழுக்கள் மற்றும் ஆட்களுக்கென 1988ம் ஆண்டில் எக்லேசியா தேய் ன்ற திருப்பீட ஆணையம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலால் உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.