2009-07-08 14:19:52

அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா ஆகிய இரு நாடுகளின் தலைவர்கள் அணுஆயுதச் சேமிப்புக்களைக் குறைப்பதற்கு ஒத்திணங்கியதற்கு பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பு பாராட்டு


ஜூலை08,2009 அமெரிக்க ஐக்கிய நாடும் இரஷ்யாவும் தங்களிடம் இருக்கின்ற அணுஆயுதச் சேமிப்புக்களைக் குறைப்பதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் ஒத்திணங்கியதற்கு பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பும் உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றமும் தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் பராக் ஒபாமாவும் இரஷ்யத் தலைவர் திமித்ரி மெட்வெதேவும் இத்திங்களன்று கிரேம்லினில் மூன்று மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் புதிய ஆயுதக் கட்டுப்பாடு குறித்த புரிந்துணர்வு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

இதன்படி ஒவ்வொரு நாடும் 1500 லிருந்து 1675 வரை அணுஆயுதங்களையும் அதன் விநியோகத்தை 500 லிருந்து 1600 வரைக் குறைப்பதற்கும் இசைவு தெரிவித்தன.

இந்தத் தலைவர்களின் ஒப்பந்தம், உலகில் அணுஆயுதங்களை ஒழிப்பது குறித்த நடவடிக்கையில் நேர்மறையான அடையாளமாக இருக்கின்றது என்று பாக்ஸ் கிறிஸ்டி துணைத் தலைவர் புரூஸ் கென்ட் கூறினார்.

அணுஆயுதங்களற்ற உலகை அமைப்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு, முயற்சிக்கும் என்று அதிபர் ஒபாமா ஆறு வாரங்களுக்கு முன்னர் கெய்ரோவில் அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

 








All the contents on this site are copyrighted ©.