2009-07-07 12:49:29

விவிலியத் தேடல் நிகழ்ச்சி . மன்னிப்புப் பெறுவதில் உள்ள நிபந்தனைகளும் தேவ கருணையும் . ஜூலை 8 .


நற்செய்தி லூக்கா , 15 , 17-25 .



அப்பா , கடவுளுக்கு எதிராகவும் உமக்கு எதிராகவும் நான் பாவம் செய்தேன் , என்கிறார் காணாமற்போன மகன் .

இந்த காணாமற்போன மகன் உவமை முழுவதுமே முடிவான , சரியான விடை தரக்கூடிய கதை . மனித வாழ்க்கை வரலாறும் கடவுளின் அருளும் இயங்கும் விதத்தைக் காட்டுகின்ற கதை . கதையில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் , மாணிக்க , மரகத , வைரக்கற்கள் .

பாவத்தைப் பற்றி கதை கூறுகிறது . பாவம் எப்போதுமே சமுதாயத்துக்கு எதிரானது . மனுக்குலத்துக்கு எதிரானது . உலகின் எந்த மூலையில் ஒருவர் இறந்தாலும் அது நம் அனைவரையும் பாதிக்கிறது . நல்லடக்கம் செய்யப்படும் மைக்கிள் ஜாக்சன் மட்டுமல்ல , எந்த ஒரு ஏழை இறந்தாலும் அது உலகைப் பாதிக்கிறது . ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் நம் நண்பர் . இயேசு கூறுகிறார் . பிறருக்குக் கொடுக்கப்படும் ஒரு டம்ளர் தண்ணீரும் , பிறருக்கு இழைக்கப்படும் தீங்கும் அவருக்கே இழைக்கப்பட்டதாகக் கூறுகிறார் .

காணாமற்போன மகன் சரியாகக் கூறுகிறார் – கடவுளுக்கு எதிராகவும் தந்தைக்கு எதிராகவும் பாவம் புரிந்ததாகக் கூறுகிறார். காணாமற்போன மகனின் தவறான போக்கு தந்தைக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது . அவருடைய சகோதரருக்கு கசப்பைக் கொடுத்தது . வீட்டில் இருந்த அனைவருக்கும் சோகத்தைக் கொடுத்தது . ஏனெனில் உலகில் உள்ள நாம் அனைவருமே கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய பாசக்கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கிறோம் . எந்த ஒரு செயலும் தூய்மைப்படுத்துவதாகவோ , ஊருணி நீரில் விஷம் கலப்பதையோ போன்றதாகும் .

பாவம் என்பது தன்னையே அழித்துக் கொள்ளும் செயலுமாகும் . சமூகத்துக்கு எதிரானது என்பதோ , தற்கொலைக்குச் சமமானது என்பதோ பாவத்தின் முழு அர்த்தத்தையும் தருவதில்லை . கடவுளுக்கு எதிராக என்னும் பதம் பாவத்துக்கு சரியான விளக்கம் அளிக்கிறது .

மிகப் பெரிய சிற்பி மைக்கிள் ஆஞ்சலோ செதுக்கிய பியத்தா என்னும் வியாகுல அன்னை சிலுவையில் இறந்த தம் மகன் இயேசுவை தம் மடியில் கிடத்தி சோக்கடலாகக் காட்சி தரும் சிலை உரோமையின் தூய பேதுரு பசிலிக்காவில் நுழைந்ததும் முதல் பீடத்தில் இருக்கிறது . விலை மதிப்பில்லாதது . அதை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் சுத்தியால் முகத்தில் அடித்து மூக்கு முகம் ஆகியவற்றை நொறுக்கிவிட்டார். அதைக் கலைஞர்கள் நவீன முறையில் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி காயப்பட்ட எந்த ஒரு அடையாளமும் இல்லாது பழைய நிலையில் உருவாக்கி நிர்மாணித்துவிட்டனர் . குற்றம் புரிந்தவர் மன்னிக்கப்பட்டுவிட்டார் . மக்களும் குற்றம் புரிந்தவரை மன்னித்துவிட்டார்கள் . இருப்பினும் குற்றவாளிக்கு முழுமையான மன்னிப்பு உண்டா . இல்லை . அவனது குற்றம் கலையின் அழகுக்கு எதிரானது . வாழ்வுக்கு எதிரானது . நம் மனத்திரையில் நம் ஞாபகத்தில் அழிக்கமுடியாத காயத்தை உண்டுபண்ணியுள்ளது . இப்படி குற்றம் , பாவம் சமுதாயத்துக்கு மட்டுமல்ல , தனி மனிதன் தன்னையே அழித்துக்கொள்வது மட்டுமல்ல , குற்றம் மாசில்லாக் கடவுளுக்கே எதிரானது .



காணாமற்போன மகன் கூறுகிறான் – தந்தையே உமக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் நான் பாவம் செய்தேன் . எனவே பாவம் இவ்வுலகில் வாழமுடியாது . இந்த உலகம் கடவுளுடைய உலகம் . காணாமற்போன மகன் வெளி உலகில் பசியால் வாடிக்கிடந்தான் . அது அவன் மனதுக்கு உள்ளே அவன் பட்ட அவஸ்தையை , துயரத்தைக் காட்டி நிற்கிறது .



பாவ அறிக்கை இடுவதையும் இந்தக் கதை காட்டுகின்றது . தம் தந்தையிடம் சரியானமுறையில் திரும்பிவந்து காணாமற்போன மகன் மன்னிப்புக் கேட்கிறான் . சமுதாயத்தின் பிரதிநிதியாக தந்தை நிற்கிறார் – சமுதாயத்துக்கு எதிராக அவன் பாவம் செய்தான் .தகுதிவாய்ந்த தந்தையிடம் மன்னிப்புப் பெறுவது முறையே . நாம் குற்றம் புரியும்போது குழுக்களிடம் சென்று மன்னிப்புக் கேட்பது சரியாகாது . அங்கு மன்னிப்பு வழங்குபவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாகச் செயல்பட முடியாது . அவ்வாறு செய்வது விளம்பரக் காட்சிப்பொருளாக அமைந்துவிடும் ஆபத்து இருக்கிறது . கட்டாயமாக பாவத்தை அறிக்கையிடுவதும் சரியாகாது . அங்கு தந்தை வழக்கப்படி ஏதாவது தண்டனை வழங்கி மன்னித்து விடலாம் . போய் சமையலறையில் வேலை செய் எனத் தண்டனை கொடுக்கலாம். அதன் பிறகு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன எனக் கூறலாம் .

தந்தையைப் போல முழுப் பொறுப்புமுள்ள ஒருவரிடம் பாவ அறிக்கை செய்யும்போது அவர் வழியாக கடவுளின் அருள் பாய்ந்து வரும் வாய்ப்பு உள்ளது . மன்னிப்பு வழங்கும் மனிதர் வாய்க்காலே தவிர மன்னிப்பைக் கடவுள் ஒருவர்தான் வழங்கமுடியும் . அப்படி பாவ அறிக்கை புரிந்து மன்னிப்புப் பெற கத்தோலிக்கத் திருச்சபையில் குருக்கள் , ரகசியங்களைக் காப்பவர்களாவும் நல்ல ஆலோசனை தருபவர்களாகவும் பாவ மன்னிப்பு வழங்கக் காத்திருக்கிறார்கள் .

கடவுள் நாம் பாவத்தை அறிக்கையிடும் முன்னரே நம் மனத்தை அறியும் அவர் ஓடோடிவந்து மன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறார் .

எங்கே மன்னிப்புப் பெறவேண்டுமோ அங்கே மன்னிப்பு விழைந்து எங்கே மன்னிப்புத் தரவேண்டுமோ அங்கே மன்னிப்புத் தந்து வாழ்வாங்கு வாழ்வோமா .








All the contents on this site are copyrighted ©.