2009-07-06 15:31:25

உலகில் இடம் பெறும் தொடர் வன்செயலுக்குக் கடவுளிடம் பதில் உள்ளது, திருத்தந்தை


ஜூலை06,2009. முதல் மனிதக் குடும்பத்தில் கொலை இடம் பெற்றதிலிருந்து மக்கள் தொடர்ந்து ஒருவர் மற்றவரைக் கொலை செய்து வருகின்றனர், எனினும் கடவுளின் இதற்கான பதில் தமது திருமகனின் இரத்தமே என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஞாயிறு நண்பகலில் கூறினார்.

ஜூலை மாத முதல் ஞாயிறு கிறிஸ்துவின் திருஇரத்ததிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதையடுத்து சகோதரர் சகோதரருக்கு எதிராகச் செயல்படுவது பற்றிய சிந்தனைகளை நண்பகல் மூவேளை செப உரையில் வழங்கிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

விடுதலைப்பயண நூலில் வாசிப்பது போன்று பழைய ஏற்பாட்டில் பலிகொடுக்கப்பட்ட விலங்குகளின் இரத்தத்தைத் தெளித்தல், இறைவனுக்கும் மக்களுக்குமிடையேயான உடன்படிக்கையை குறித்து நிற்கின்றது என்றும் மூவேளை செபத்திற்காக வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்து இறுதி இரவு உணவில் இதனை மீண்டும் செய்தார், அவர் கல்தூணில் அடிபட்டதிலிருந்து சிலுவையில் இறந்த பின்னர் அவரின் விலா குத்தப்பட்டது வரை அவர் தமது குருதி அனைத்தையும் உண்மையான பலியயிடப்பட்ட செம்மறியாக அகிலத்தின் மீட்புக்காகச் சிந்தினார் என்றார் அவர்.

இரத்தத்தைச் சிந்துதல் வரலாறு முழுவதும் இடம் பெற்று வருகிறது, மனித இரத்தம், வன்முறை, அநீதி காழ்ப்புணர்வு ஆகியவைகளால் தொடர்ந்து சிந்தப்பட்டு வருகின்றது என்று வருந்திய திருத்தந்தை, மனித வாழ்வு புனிதமானது, அது கடவுளுக்கு மட்டுமே சொந்தம் என்று மனிதர் எப்போது உணருவார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். குருதியின் அழுகுரல் பூமியின் பல இடங்களிலிருந்து வருகின்றது, இறைவன் தமது வாழ்வையே நமக்குத் தந்த அவரது திருமகனின் இரத்தத்தினால் பதில் சொல்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்து தீமையினால் தீமைக்குப் பதில் சொல்லமாட்டார், மாறாக அவரது முடிவில்லாத அன்பினால், நன்மையினால் பதில் சொல்கிறார், கிறிஸ்துவின் இரத்தம் மனித சமுதாயத்திற்காக கடவுள் கொண்டுள்ள விசுவாசமான அன்பின் உறுதிப்பாடாக இருக்கின்றது என்றார் அவர்.

 








All the contents on this site are copyrighted ©.