2009-07-05 20:10:22

இன்றைய திருநாள் - ஜூலை 6 . புனித மரிய கொரற்றி .


இவர் ஓர் கன்னிகை , மறைசாட்சி . வாழ்ந்த காலம் கி.பி.1890-1902.



இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர் . கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது . 12 வயதில் இவருக்குப் புது நன்மை கொடுக்கும்போது கூட , மற்றவர்களைவிட ஏழையாக , எளிமையாக இருந்தார் . ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞானச் சத்துணவு மிக உயர்ந்தது . இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார் .

புது நன்மை வாங்கிய பிறகு ஐந்து வாரங்கள் கூட ஆகவில்லை . அலெக்சாண்ட்ரோ ஸெரனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான் . மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார் . ஒரு பாவம் செய்வதைவிட சாவதுமேல் என்பதை நன்கு தெரிந்திருந்தாள் . அலெக்சாண்ட்ரோ பாவத்துக்கு இணங்க மறுத்த மரிய கொரற்றியின் மலர் போன்ற மாசற்ற உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான் . இது பாவம் , “இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா அவனை எச்சரித்தும் பயனில்லை . குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார் . “மன்னித்துவிட்டேன் அவரை”, என்று சொல்லிவிட்டுத்தான் மரித்தார் . கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது . பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான் . “மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டேன்” என அறிவித்தான் . 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான் . அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான் .

இந்த அலெக்சாண்ட்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3 ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து கி.பி. 1970 காலமானார் . 50 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு 12 ஆம் பத்திநாதர் புனிதை என்ற பட்டம் கொடுத்தார் . அப்போது அவருக்கு அருகில் மரியாவின் தாயும் , இரண்டு சகோதரிகளும் , ஒரு சகோதரரும் உடனிருந்தனர் . இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதைப் பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சாண்ட்ரோவும் பங்குபெற்று மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினார் .

சிந்தனைக்கு – நம் உடல் கடவுள் வாழும் ஆலயம் என்பதை நினைவி்ல் கொள்வோம் .








All the contents on this site are copyrighted ©.