2009-07-04 17:37:04

வழிபாட்டு ஆண்டின் 14 ஆவது ஞாயிற்றுவிழா .050709.


நாம் இன்று வழிபாட்டு ஆண்டின் 14 ஆவது ஞாயிற்றுவிழாவைக் கொண்டாடுகின்றோம் .

இன்றைய நற்செய்தியை நமக்கு வழங்குவது தூய மாற்கு.6,1-6.



நம்மை பிறர் வெறுத்தாலும் நம்முடையை அன்பு இறுதியில் பயன் தரும் என்பது மறையுரையின் மையக் கருத்து .



1960 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் சுடான் நாட்டில் மதக்கலவரம் பயங்கரமாக வெடித்தது . ஒரு கிறிஸ்தவ இளைஞர் அங்கிருந்து தப்பி அடுத்திருந்த உகாண்டா நாட்டுக்கு ஓடிவிட்டார் . அவர் பெயர் பாரிடே டபான் . உகாண்டாவில் இருந்தபோது குருத்துவப் படிப்பை முடித்து குருவானவரானார்.சுடான் நாட்டில் நிலைமை சரியானதும் டபான் தம் நாட்டிற்குத் திரும்பினார் . தம் நாட்டில் அவருக்கு ஒரு பங்குத்தளம் பணிசெய்வதற்கு அளிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்த மக்கள் அவரைக் குருவானவர் என நம்ப மறுத்தார்கள் .

டபான் கூறுகிறார் , மக்கள் அவரை உற்று நோக்கிவிட்டு நீ ஒரு கறுப்பு நிறத்தவர் . நீ ஒரு குருவானவர் என்று எப்படிக் கூறமுடியும் எனக் கேட்டனர் . ஏனெனில் அதுவரை அங்கு வெள்ளையர்களே குருவானவர்களாக இருந்து வந்தனர் . வெள்ளை நிறத்து குருவானவர்கள் மக்களுக்கு உணவும் ஆடையும் கொடுத்து வந்தனர் . டபானோ அந்நாட்டு மக்களினத்தைச் சேர்ந்தவர் . அவரிடம் மக்களுக்குக் கொடுப்பதற்கு ஏதுமில்லை .

மேலும் டபான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கொண்டு வந்த மாற்றங்களை அமலாக்க வேண்டியிருந்தது . மாற்றங்கள் மக்களுக்கு மிகச் சிரமமாக இருந்தன .

இந்தக் கறுப்பு நிறக்குரு பீடத்தை திருப்பிவிட்டு மக்களை நோக்கி பலிபூசை நிகழ்த்துகிறார் . நமது மொழியிலேயே பலி பூசையை நிகழ்த்துகிறார் . இவர் உண்மையான குருவானவராக இருக்கமுடியாது . பல்வேறு சிரமங்களுக்குப் பிறகுதான் அம்மக்கள் டபானை குருவாக ஏற்றுக் கொண்டனர் .



இயேசு தம் சொந்த ஊராகிய நாசரேத்துக்குச் சென்றபோது வெறுத்து ஒதுக்கப்பட்டதன் நவீன கதைதான் குருவானவர் டபான் பட்ட சிரமங்கள் .

மக்கள் ஒருவர் மற்றவரிடம் , இவர் தச்சர் அல்லவா . மரியாவின் மகன்தானே என இழிவாகப் பேசிக் கொண்டனர் . அவர்கள் என்ன நினைத்தார்கள் – இவரும் நம்மைப்போல சாதாரண பணியாளர்தானே . நம்மைவிட கடவுளைப்பற்றி இவருக்கு எப்படி இன்னும் அதிகமாகத் தெரியமுடியும் என்று நினைத்தனர் .

தச்சன் மகனாகிய இயேசுவுக்கு கடவுள் பற்றிய மெய்யறிவு எப்படி வந்தது என்று நாசரேத்தூர் மக்கள் மட்டும் ஆச்சரியப்படவில்லை , கிறிஸ்தவர்களுக்கு எதிராக உரோமைய ஆட்சியில் செயல்பட்ட அதிகாரி செல்சஸ் என்ற ஒருவன் கிறிஸ்தவர்களிடம் உங்களுடைய கடவுள் கிராமத்தில் பிறந்த தச்சர் மகன்தானே என ஏளனமாகப் பேசியிருக்கிறான் . இன்றும் சிலர் நாம் கடவுள் என்றும் ஆண்டவர் என்றும் கூறும் இயேசுநாதர் பல்கலைக் கழகத்தில் படிக்கவில்லையே என நினைப்பதுண்டு .

முக்கியமான கருத்துக்கு இப்போது வருவோம் . இயேசுவும் டபான் என்ற குருவும் மக்களால் ஏளனமாக வெறுத்து ஒதுக்கப்பட்ட இரு எடுத்துக்காட்டுக்கள் .

அமெரிக்காவின் மாபெரும் பேச்சாளர் பேராயர் புல்டன் ஷீன் என்பவரை அவர் கல்லூரியின் மேடைப்பேச்சுக் கழகம் மிக மட்டரகமான பேச்சாளர் என ஒதுக்கி ஓரம் கட்டினர் .

நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே என்பவர் எழுத்தத் தொடங்கியபோது , உமக்கும் எழுத்துப்பணிக்கும் வெகு தூரம் . நீ அதை மறந்துவிடு என்றனர் .



புகழ்மிக்க ஆங்கில எழுத்தாளர்கள் ஆகத்தா கிறிஸ்டி , சார்லஸ் டிக்கன்ஸ் , ஜேன் ஆஸ்டின் , ஜோசப் காண்ரட் , சாமுவேல் பெக்கட் , ஆர்னல்ட் பென்னட் , மாக்ஸ் பீர்போம் , என பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம் . அவர்கள் காலங்கள் போற்றும் நூலாசிரியர்கள் . ஆனால் தொடக்க காலத்தில் தூக்கி குப்பையில் எறியப்பட்டவர்கள் .



நம் வாழ்க்கைக்கு இன்றைய நற்செய்தி என்ன கூறுகிறது . இயேசுவே கூறுகிறார் - குருவை மிஞ்சிய சீடர் இல்லை . தலைவனை மிஞ்சிய பணியாள் இல்லை .



இயேசுவையே அவரது காலத்தில் வெறுத்து ஒதுக்கினார்கள் என்றால் , அவருடைய சீடர்களாகிய நம்மையும் உலகம் வெறுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை . கருச்சிதைவுக்கு எதிராக நிற்கும் போது உல்லாச உலகம் நம்மை வெறுக்கத்தான் செய்யும் . மனித உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்கும்போது நம்மை அநீதி புரிவோர் வெறுக்கத்தான் செய்வர் . சில கிறிஸ்தவர்களே நம்முடைய மொழி , சாதி , பொருளாதாரம் காரணமாகவும் மற்றும் நாம் வெற்றி பெறும்போதும் வயிற்றெரிச்சல் பட்டும் நம்மை வெறுப்பார்கள் . நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நம்மை வெறுப்பதைக் காண்கிறோம் . நம்மோடு பணி செய்பவர்களே நமக்கு எதிரிகளாகச் செயல்படுவதைக் காண்கிறோம் . இயேசுவின் சீடர் யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுக்கவில்லையா . குடும்பங்களிலே மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இல்லாதிருப்பதைப் பார்க்கிறோம் .



இவ்வாறு வெறுக்கப்படும்போது நாம் மனம் தளர வாய்ப்பிருக்கிறது . நாம் கொண்ட நம் கொள்கையை விட்டுவிடலாம் . கோப உணர்ச்சிகளுக்குத் தள்ளப்படலாம் . வாழ்வில் கசப்பு உணர்ச்சி கொண்டு பழிவாங்க நினைக்கலாம் .



லூனி டியூன்ஸ் என்ற கார்ட்டூன் படத்தில் வரும் ஒரு நாடக பாத்திரம் எல்லோரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் . அவர் மற்றவர்கள் அவரை வெறுத்தாலும் அன்பு காட்டத் தயங்கமாட்டார் . அவரை எல்லோரும் வெறுத்தார்கள் . அவர் அருகில் வந்தாலே துர் நாற்றம் அடிக்கும் . நாம் ஓடவேண்டியிருக்கும் . ஆனாலும் அவர் விரட்டி விரட்டி அன்பு செய்யக்கூடியவர் . அவர் பெயர் பேப்பே . பேப்போ யாரையும் வெறுத்ததில்லை . ஒதுக்கி விடவுமில்லை . அவரை கார்ட்டூன் பார்த்த எல்லோருக்கும் பிடிக்கும் .

இயேசுவும் அப்படித்தான் . யாரையும் அவர் தள்ளிவிடுவதில்லை. இயேசுவை மற்றவர்கள் மறுதலித்தாலும் , வெறுத்தாலும் அவர் விடாது அன்பு காட்டுபவர் . நாமும் அவ்வாறே பிறர் நம்மை வெறுத்தாலும் தவறாது அன்பு காட்டுவோமா . நாமும் இயேசுவையும் , குரு டபானையும் , கார்ட்டூன் பாத்திரம் பேப்பேயையும் நமக்கு மாதிரியாக எடுத்துக் கொள்வோமா . இயேசு கூறுகிறார் . நீங்கள் வெறுக்கப்படும்போது மகிழுங்கள் . உங்களுக்கு வானகத்தில் மிகப்பெரிய கைம்மாறு காத்திருக்கிறது. தலைவர் இயேசுவின் பொருட்டு இப்போது அழுபவர்களே நீங்கள் பின்னர் சிரிப்பீர்கள் என்பது வேதவாக்கு .








All the contents on this site are copyrighted ©.