2009-07-01 14:46:42

ஹொண்டூராஸில் அரசியல் அமைப்புமுறைகள் காக்கப்படுமாறு இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் அழைப்பு


ஜூலை01,2009 ஹொண்டூராஸ் நாட்டில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பில் அரசுத் தலைவர் மானுவேல் ஜெலாயா பதவி இழந்துள்ள வேளை, அந்நாட்டில் அரசியல் அமைப்பு விதிமுறைகள் காக்கப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளனர் இரண்டு இலத்தீன் அமெரிக்க ஆயர்கள்.

இது குறித்துப் பேசிய பொலிவிய நாட்டு ஆயர் பேரவைச் செயலர் ஆயர் ஹேசுஸ் ஹூவாரஸ், ஜனநாயக வழிமுறைகளுக்குத் தடைகளாய் இருக்கும் ஒவ்வொரு செயலும் வருந்தத்தக்கது என்றுரைத்து ஹொண்டூராஸில் விரைவில் சட்டரீதியான ஒழுங்கு முறைகள் திரும்புமாறு வலியுறுத்தினார்.

இலத்தீன் அமெரிக்காவி்ல் அமைதியையும் இணக்கத்தையும் காப்பதற்கு ஜனநாயகமே சிறந்த வழி என்றும் ஆயர் தெரிவித்தார்.

ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் ஆணையின் பேரில் கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார். இவர் மீண்டும் தேர்தலில் நிற்பதற்கான தடைகளை அகற்றும் புதிய அரசியல் அமைப்புக்கு முயற்சித்த காரணத்தினால் இந்நடவடிக்கை இடம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

எனினும் இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவுடன் புதிய அரசுத்தலைவராகப் பணிப்பிரமாணம் செய்துள்ள ராபர்த்தோ மிக்கேலெத்திக்கு அந்நாட்டு காங்கிரஸ் அவை ஆதரவையும் வழங்கியுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, ஹொண்டுராசில் இடம் பெற்றுள்ள ஆட்சி கவிழ்ப்பைக் கண்டித்துள்ள ஐ.நா.பொதுஅவை, ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவரும் அரசியல் அமைப்புமுறையும் காக்கப்படுமாறு அழைப்புவிடுத்தது.








All the contents on this site are copyrighted ©.