2009-06-30 11:09:44

காணாமற் போன மகனின் உவமை லூக்கா நற்செய்தி 15 , 11-32.


இந்த உவமையின்படி கடவுளுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் . கதையில் நாம் காணும் இரண்டு ஊதாரி மகன்களை நமக்குத் தெரியும் . மூன்றாவது மகன் யார் எனக் கேள்வி எழுப்பியிருந்தோம் .

இரண்டு ஊதாரி மகன்களில் இம்மண்ணில் பிறந்தவர்கள் . மூன்றாவது மகன் கடவுளின் திருமகன் இயேசு . அவர் தந்தையாகிய கடவுளோடு முடிவில்லாத காலத்திலிருந்து வாழ்ந்து வருபவர் .

கதையில் வரும் இரண்டாவது மகன் தன் உடல் இன்பங்கருதி தொலை தூரம் சென்று தன்னுடைய தந்தையின் இல்லத்தை மறந்து வாழ்ந்தான் .

வீட்டிலிருந்த மூத்தமகன் தற்பெருமை காரணமாக தன் தலைக்கனம் காரணமாக வீட்டிலிருந்தும் தந்தையை விட்டு தொலைதூரத்தில் வாழ்ந்து வந்தான் .

வான்வீட்டில் தந்தையாகிய கடவுளோடு வாழ்ந்து வந்தார் இறைமகன் இயேசு . தந்தையாகிய கடவுளுக்கும் மகனாகிய இயேசுவுக்கும் ஊதாரி மகன்களின் போக்கு வருத்தத்தைக் கொடுத்தது . அவர்களுக்கு வாழ்வாங்கு வாழக் கற்றுக் கொடுத்து அந்த ஊதாரிகளைப் போன்ற மற்ற மக்களையும் நல்வழிப்படுத்த இயேசு மனு உரு எடுத்தார் . அவரை அறியாத ஊதாரிகள் சிலுவையில் ஏற்றி இயேசுவைக் கொன்று போட்டனர் .

இயேசுவைத் தம் பாவத்தால் கொன்று போட்ட இளைய மகன் , பாவத்தில் ஊறிப்போயிருந்ததாலும் , தந்தை மன்னிப்பாரா என்ற அச்சத்தாலும் மனம்மாறி வீடு திரும்பத் தயக்கம் காட்டினான் . பசியும் கடுமையான வேலையும் அவனை வாட்டியபோது நல்லறிவு வந்தது . வீடு திரும்பினான் . தந்தையும் அவனை மனமாற மன்னித்து வீட்டில் வரவேற்று ஏற்றுக் கொண்டார் .

மூத்த மகனும் இயேசுவின் துயரையும் மன்னிக்கும் தாராள மனப்பான்மையையும் கண்டு மனம் மாறினாலும் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளத் தயக்கம் காட்டினான் . சிலுவையில் கொல்லப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார் . வாழ்கின்றார் . அவரது பேரன்பை கல்லறை அடக்கிக் கொண்டிருக்கமுடியாது . இரண்டு ஊதாரிகளும் இயேசு அவர்களோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தார்கள் . இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்த ஊதாரி மைந்தர்கள் பின்னர் எவ்வாறு வாழ்ந்தார்கள் . நீங்களும் நானும் நம் வாழ்வில் தப்புத்தாளங்கள் போட்டிருக்கலாம் . மனம் மாறி வாழும் நாம் இயேசுவின் அன்பை மறந்திடுவோமா .



ஊதாரி மைந்தனின் ஆன்மீகப் பயணம் எப்படிச் சென்றது .

அவன் தன் இச்சைபடி வாழ நினைத்தான் .உல்லாசமாக , சுதந்திரமாக வாழ நினைத்தான் . தன் தந்தையைப்பற்றியோ , தன் சகோதரனைப்பற்றியோ அவன் நினைக்கவில்லை . தன்னையே அளவுக்கு அதிகமாக நம்பி , உலகம் பொல்லாததாக இருந்தாலும் தான் எப்படியும் பொருளீட்டிப் பிழைக்கமுடியும் என நினைத்தான் . நினைத்தது நடக்கவில்லை . தன்னையே வெறுக்கத் தொடங்கினான் . கடவுளை மறந்ததால் இயற்கையும் அவனை மறந்தது . வாழ்க்கையே அவனுக்கு எதிரானது . பன்றிகள் தின்னும் நெற்றும் கிடைக்காதபோதுதான் அவனுக்கு ஞானம் வந்தது . வேதனையும் தனிமையும் அவனுக்கு நல்ல பாடங்களைக் கற்பித்தன . தான் தந்தைக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் பாவம் செய்ததாக உணர்ந்தான் . தன் நிலைமைக்குக் காரணத்தை ஆராய்ந்து தெளிவடைந்தான் . எழுந்தான் . வீடு நோக்கி நடையைக் கட்டினான் . சாலை அவனை வீட்டுக்கு வேகமாகக் கூட்டிச் சென்றது . தான் , எனது எனும் செருக்கு அகன்றது . தன் தவற்றை உணர்ந்தான் , உண்மையை ஏற்றுக்கொண்டான் . தலை நிமிர்ந்து நின்றான் , வீடு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தான் . இது மட்டும்தான் அவன் மன மாற்றத்தின் முழு இரகசியமும் அல்ல . தந்தையாகிய கடவுளே மனமாற்றத்தைத் தூண்டுகிறார் . நாம் வீடு திரும்பும்போது வழியில் ஓடோடி வந்து வரவேற்கிறார் . மனமாற்றம் மிக எளிதாகத் தெரிகிறதே . மன்னிப்புப் பெறுவதும் மிக எளிதாகத் தெரிகிறதே . அவை உண்மைதானா .








All the contents on this site are copyrighted ©.