2009-06-29 15:42:31

ஆயர்கள் அன்பு மேய்ப்பர்களாக இருக்க வேண்டும், திருத்தந்தை


சூன்29,2009 ஆயர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை மேய்ப்பவர்கள் என்பதால் அவர்கள் விசுவாசிகள் மீது எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டும், அதேவேளை, பகைவர்கள் மற்றும் ஓநாய்களை எதிர்த்து நிற்பதற்கும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராயலத்தில் கொழும்புவின் புதிய ஆயர் உட்பட உலகின் 34 பேராயர்களுக்குப் பால்யம் வழங்கும் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, ஆயர்களின் பணிகள் பற்றி விளக்கினார்.

ஆயர் என்பது பார்த்தல் என்ற பொருளைக் கொண்ட கிரேக்க மூலச்சொல்லிலிருந்து பிறந்தது என்று கூறிய அவர், ஆயர்கள் விழித்திருந்து காக்க வேண்டியவர்கள், ஆயினும் இது சிறைக்காவலர்கள் போன்று வெளியில் காப்பதைக் குறிக்கவில்லை என்றும் கூறினார்

கிறிஸ்து ஆன்மாக்களின் காவலராக இருக்கிறார் என்றால், மனிதன் தனது வாழ்வின் சாரத்தினின்றும் உண்மை மற்றும் அன்பினின்றும் விலகிச்செல்லாதிருப்பதில் ஆயர்கள் கவனமாக இருக்கவும் அவர்களுக்கு முன்மாதிரிகையாகவும் இருக்கவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

இன்றைய உலகில் நமது விசுவாசத்தைச் செயலில் காட்ட வேண்டுமெனவும் உரைத்த அவர், புனிதர்கள் அசிசி பிரான்சிஸ், பாத்ரே பியோ, ஜான் மரிய வியான்னி போன்றவர்கள் இன்றைய திருச்சபைக்கு எடுத்துக்காட்டுகளாகவும் இருக்கிறார்கள் என்றார்.

ஆர்ஸ் நகர் புனித ஜான் மரிய வியான்னி ஆண்டவரை இரசித்து சுவைத்தவர் என்று கூறிய அவர், மேய்ப்புப்பணியின் அன்றாட சவால்களைச் சந்திப்பதற்கு அவர் வழியைப் பின்பற்றவும் அழைப்புவிடுத்தார்.

இன்று பால்யம் பெற்ற 34 பேராயர்களில் மூவர் ஆசியர்கள்.








All the contents on this site are copyrighted ©.