2009-06-27 15:38:11

வியட்நாமில் நீதியும் ஒன்றிப்பும் சமத்துவமும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்குத் தலத்திருச்சபைக்கு அழைப்பு


சூன்27,2009. வியட்நாமின் 31 ஆயர்களை, அட் லிமினா சந்திப்பை முன்னிட்டு இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நீதியும் ஒன்றிப்பும் சமத்துவமும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு வியட்நாம் திருச்சபை தன்னை அதிகமாக அர்ப்பணிக்குமாறு வலியுறுத்தினார்.

வியட்நாமின் தற்போதைய வளர்ச்சி, சர்வதேச சமுதாயத்திற்குத் திறந்த மனதாய் இருப்பதற்கு வழி அமைக்கின்றது என்றுரைத்த அவர், இந்நிலையில் அரசுக்கும் தலத்திருச்சபைக்கு சுமுகமான உறவு இன்றியமையாதது என்றும் கூறினார்.

திருச்சபை, அரசு அதிகாரிகளுடன் உரையாடல் உணர்வு மற்றும் மதிப்புடன்கூடிய ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் நாட்டின் அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக ஆக்கமுடன் உழைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலநாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச குருக்கள் ஆண்டு பற்றியும் வியட்நாம் ஆயர்களிடம் பேசிய திருத்தந்தை, குருக்கள் அகவாழ்வில் ஆழப்படவும் அவர்களை உருவாக்கும் பயிற்சியில் உதவவும் கேட்டுக்கொண்டார்.

இளையோர் மீதும் குடும்பங்கள் மீதும் கவனம் செலுத்தவும் ஆயர்களிடம் கூறிய திருத்தந்தை, வியட்நாம் ஆயர் பேரவை உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு 2010ம் ஆண்டில் இடம் பெறுவதைக் குறிப்பிட்டு இது இறைமக்கள் சமுதாயத்தின் விசுவாச வாழ்வைப் புதுப்பிப்பதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.