2009-06-27 09:02:27

ஆண்டின் 13 ஆம் ஞாயிறு . மாற்கு நற்செய்தி அதிகாரம் 5 21 – 43 . 280609 .


21 இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.22 தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,23 ' என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் ' என்று அவரை வருந்தி வேண்டினார்.24 இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.25 அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.26 அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.27 அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.28 ஏனெனில், ' நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ' என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.29 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ' என் மேலுடையைத் தொட்டவர் யார்? ' என்று கேட்டார்.31 அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ' இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டவர் யார்? ' என்கிறீரே! ' என்றார்கள்.32 ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.33 அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.34 இயேசு அவரிடம், ' மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ' என்றார்.35 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ' உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ' என்றார்கள்.36 அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ' அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ' என்று கூறினார்.37 அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.38 அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.39 அவர் உள்ளே சென்று, ' ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ' என்றார்.40 அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.41 சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ' தலித்தா கூம் ' என்றார். அதற்கு, ' சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ' என்பது பொருள்.42 உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள்.43 ' இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.








All the contents on this site are copyrighted ©.