2009-06-22 15:14:19

மாமனிதர்கள் தேவை


சூன் 22,2009. மனிதனுக்கு மனிதனாக ஆவதுதான் மிகவும் கஷ்டமான காரியம் என்று மீர்ஸா காலிப் என்பவர் சொன்னார். நல்ல குணமில்லாத கீழோர் தன்மைப் பற்றிச் சொல்லும் வள்ளுவப் பெருந்தகையோ, “மக்களே போல்வர் கயவர், அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல்” என்கிறார். இந்த 1071ம் குறளில் நான் கயவர்களைக் கண்டேன், ஆனால் அவர்கள் மனிதர்கள் போலவே இருந்தார்கள் என்று சற்று கேலியாகவே சொல்லியிருக்கிறார். பெரிய நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் சிலர், “இவர்கள் அவர்கள்” என்று அழைக்கப்படுவதில்லையா? என்று ஒரு சமுதாயச் சிந்தனையாளர் கேள்வி கேட்கிறார். உருவத்தால் மனிதனைப் போல் பிறப்பது எளிது. ஆனால் மனிதனாக இருப்பது கடினம். எனினும் நல்ல மாமனிதரைக் கண்ட சித்தர் ஒருவர், மனிதரிலும் மனிதர் உண்டு என்று ஆச்சரியப்படுகிறார். அப்படியானால் மனிதரை எப்படி அடையாளம் காண்பது? ஒருவருடைய பண்பு, செயல், ஒழுக்கம் இவைகள்தான் அவரை மனிதராக அடையாளம் காட்டும் அளவுகோல்கள். இன்றைய உலகிற்கு, குறிப்பாக சண்டைகள் இடம் பெறும் இடங்களுக்கு மாமனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

அன்பர்களே, தினமும் தவறாமல் சாப்பிடுகிறவர்களுக்குப் பசி அடங்கிவிடுகிறதா? இல்லையே. மீண்டும் மீண்டும் பசிக்கிறது. இது என்ன கொடுமை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பசி என்றால் என்ன? என்று கேட்கும் மக்கள் ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் தன் வயிற்றோடு போராட்டம் நடத்தும் கூட்டமும் உலகில் இருக்கிறது. இக்கூட்டத்தின் வற்றிய வயிறுகள் எண்ணை இன்றியே எரிகின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை இதற்கு ஒரு சான்று. ஆசிய பசிபிக் பகுதியில் 64 கோடியே 20 இலட்சம் பேர் பசியால் வாடுகின்றனர். வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டில் உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை நூறு கோடியை எட்டும், இவ்வெண்ணிக்கை உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பாகம், இந்தப் பசிக்கொடுமை உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தலை முன்வைக்கின்றது என்று அந்நிறுவன இயக்குனர் ஜாக் தியோப் அறிவித்தார்.

உலகில் சுமார் 102 கோடிப்பேர் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்லுகின்றனர். இப்படி பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 1995லிருந்து 1997ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 82 கோடியே 50 இலட்சமாகவும், இது 2000 த்திலிருந்து 2002 வரையுள்ள காலத்தில் 85 கோடியே 70 இலட்சமாகவும், 2004 முதல் 2006 க்கு இடைப்பட்ட காலத்தில் 87 கோடியே 30 இலட்சமாகவும், இவ்வாண்டில் 100 கோடியை எட்டும் எனவும் அந்நிறுவனம் தனது புதிய அறிக்கையில் முன்னுரைத்துள்ளது.

சர்வதேச சமுதாயம் கடந்த சனிக்கிழமை உலக அகதிகள் தினத்தைக் கடைபிடித்தது. அத்தினத்தையொட்டி ஐ.நா.வின் அகதிகளுக்கான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உலகில் கடந்த ஆண்டில் வன்முறை மற்றும் அடக்குமுறைகள் காரணமாக, ஏறத்தாழ நான்கு கோடியே இருபது இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அறிவித்தது. திருத்தந்தை 16ம் பெனடிக்டும், இத்தாலியின் புனித பாத்ரே பியோ திருத்தல வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு ஆற்றிய இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில், இந்த உலக அகதிகள் தினத்தை நினைவுகூர்ந்தார். இலட்சக்கணக்கான மக்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளும் மோதல்கள் நிறுத்தப்பட அழைப்புவிடுத்தார். அதேசமயம் போர், அடக்குமுறைகள், இயற்கைப் பேரிடர்கள் ஆகிய சூழல்களால் புலம் பெயரும் மக்களை ஏற்பது ஒவ்வொருவரின் கடமை என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

நமது அண்டை நாட்டில் நமது தொப்புள்கொடி உறவுகள் படும் வேதனைகள விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா நலவாழ்வு மையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ளவர்களில் பெற்றோரையும் உற்றோரையும் பிரிந்து வாழும் சிறுவர்களைப் பார்வையிடுவதற்கும், அவர்களைத் தம்மோடு அழைத்துச் செல்வதற்குமென பல உறவினர்களும் தாய்-தந்தையரும் அலைந்து திரிகிறார்கள். இவர்களில் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து இதற்காகவே வவுனியாவுக்கு வந்திருக்கின்றார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஒட்டிய வயிறுகளுடன் எலும்புகளை எண்ணக்கூடிய அளவுக்குக் கஷ்டப்படும் அகதிகளின் நிலைமை சொல்லும் தரமன்று. ஆக, அன்பர்களே, மனிதாபிமானம் நிறைந்த, மனிதனுக்குரிய குணநலன்கள் கொண்ட மனிதர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். எனினும் அந்தச் சித்தர் சொல்லியிருப்பது போல, மனிதரிலும் மனிதர் இருக்கத்தான் செய்கிறார்கள். அகதிகள் முகாம்களில் வேலை செய்யும் தொண்டுள்ளங்களை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். தமிழகத்தில் மேட்டூர் திருவாளர் கணேசன் பற்றி ஒரு வார இதழில் வாசித்து அசந்தே போனோம். அய்யா, அங்க பாருங்க ஓர் அனாதைப் பிணம் என்று யாராவது சொல்லிவிட்டால் அலறிஅடிச்சு ஓட்டம் பிடிப்பவர் பலர். ஆனால் அனாதைப் பிணம் என்ற தகவல் கிடைத்துமே காவல் துறையினரிடம் முறையாக அறிவித்து அனுமதி பெற்று தனது சொந்த செலவில் அதைப் புதைக்க ஏற்பாடு செய்கிறார் திருவாளர் கணேசன். அதேபோல் எங்காவது விபத்து நடந்த செய்தி அறிந்ததும் அங்கு இவர் ஓடிச் செல்கிறார். அவ்விடத்தில் இவர் முதலில் செய்வது, விபத்தில் அகப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பது, இரண்டாவதாக விபத்தில் சிக்கியவரின் உடைமைகளைக் காப்பாற்றுவது, மூன்றாவதாக அதை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பது. இதற்காக இவர் சல்லிக்காசும் வாங்குவது கிடையாதாம்.

திருவாளர் கணேசன் பற்றிய செய்தியை வெளியிட்ட அந்த வார இதழ், அவர் இந்தத் தொழிலுக்கு வந்த காரணத்தையும் சொல்லியிருக்கிறது. மேட்டூரில் பிறந்த இவரது தந்தைக்கு அரசின் மின்வாரியத்தில் வேலை. இவரது மனைவிக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை. இவருக்கு இரண்டு பிள்ளைகள். 21 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விபத்துதான் இவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. ஒருநாள் அவர் காரில் போகும்போது சின்னப்பள்ளம் என்ற இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் அவர்களது காரில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார். அத்துடன் அவர்கள் கொண்டு வந்த பெட்டியில் இருந்த கால்கோடி ரூபாய் பணத்தையும் அப்படியே திருப்பிக் கொடுத்திருக்கிறார். அதற்குச் சன்மானமாக அவர்கள் கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் இவரது காரில் இவருக்கும் தெரியாமல் 15 இலட்சம் ரூபாயை வைத்துள்ளார்கள். இதை இன்னொருவர் மூலம் அறிந்த கணேசன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவர்களோ, அந்தப் பணத்தை வைத்து ஏதாவது தொழில் செய் என்றார்கள். சிந்தித்து பார்த்ததன் பயனாக ஐந்து அவசர சிகிச்சை மருத்துவ வாகனம் வாங்கி இப்பொழுது இந்தப் பணி செய்கிறார் கணேசன். அன்றிலிருந்து வசதியில்லாதவர்களை மருத்துவமனையில் சேர்த்து செலவுக்குப் பணம் கொடுத்தல், விபத்தில் சிக்கினவர்களை மருத்துவமனையில் சேர்த்து அப்போதைய செலவை ஏற்றல், அனாதைப் பிணங்களைப் புதைத்தல் போன்ற நற்பணிகளைச் செய்து வருகிறார் அனாதைப் பிணங்களின் நண்பர் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் கணேசன்.

“செய்யும் தொழிலில் நம்பிக்கைதான் முக்கியம். நமக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய வாழ்க்கை தத்துவம்” என்று சொல்பவர் திருவாளர் கணேசன். எப்படியும் வாழலாம் என்று செயல்படும் மக்கள் மத்தியில் இப்படியும் மாமனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள். ஒருவரை மனிதர் என்று அவரின் உருவத்தையோ பதவியையோ பட்டத்தையோ வைத்து அல்ல, ஆனால் அவரின் ஒழுக்கத்தை வைத்துத்தான் சொல்ல வேண்டும். அண்மையில்கூட தமிழகத்தில் அஞ்சல் அலுவலகப் பணியாளர் ஒருவருக்கு அவரது நாணயமான வாழ்வுக்கு விருது வழங்கப்பட்டதைச் செய்தியில் வாசித்தோம். தபால்களைப் பிரித்த போது அதில் கிடந்த நகைக் கவரை அதிகாரிகளிடம் அவர் அப்படியே சேர்த்திருக்கிறார்.

“பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும், தோன்றின மறையும், மறைந்தன தோன்றும், பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்” என்று பாடினார் பட்டினத்தார். மனித வாழ்வின் நிதர்சனம் இதுதான். அன்பர்களே, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும். தொண்டு செய்வதில் கிடைக்கும் மனநிம்மதி வேறு எதிலும் இருப்பதில்லை. ஆனால் தொண்டு செய்வதற்குப் பணமாகத்தான் கொடுத்து உதவ வேண்டும் என்பதில்லை. ஏனெனில் உடல் உழைப்பிலும் தொண்டு செய்யலாம். பிறர்க்குப் பயன்படும் வகையில் வாழ்வதே தொண்டுதான். ஒருமரக்கன்றை நட்டு வளர்த்துக்கூட சேவை செய்யலாம். அது வளர்ந்த பின்னர் எத்தனையோ பலன்களை கொடுக்கும் அல்லவா?

ஆம். தொண்டு செய்வதற்குப் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நல்மனம் மட்டும் இருந்தாலே போதும். நன்மை செய்வதில் மனந்தளர வேண்டாம், தீமைக்குப் பதில் நன்மையே செய்யுங்கள் என்கிறது புனித விவிலியம்.

 








All the contents on this site are copyrighted ©.