செபம் மற்றும் பிறரன்புச் செயல்கள் மூலமாக புனித பாத்ரே பியோவின் தூய்மையான வாழ்வைப்
பின்பற்றி நடக்குமாறு திருத்தந்தை அழைப்பு
சூன்22,2009. மனதிட்பமே வினைத்திட்பம் என்ற கோட்பாடு மற்றும் உலகப் போக்குக்கு எதிராகப்
போராட விசுவாசிகளை ஊக்கப்படுத்திய அதேவேளை, செபம் மற்றும் பிறரன்புச் செயல்கள் மூலமாக
புனித பாத்ரே பியோவின் தூய்மையான வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் சான் ஜொவான்னி ரொத்தோந்தோவிற்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள்
திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அங்கு புனித பாத்ரே பியோ ஆலயத்தின் முன்பாக நிகழ்த்திய
திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார்.
சான் ஜொவான்னி ரொத்தோந்தோவிலுள்ள புனித
பாத்ரே பியோ கல்லறையில் செபித்து திருநற்கருணை ஆராதணையிலும் சிறிது நேரம் செலவழித்த அவர்,
பின்னர் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், இயேசு காற்றையும் கடலையும் அடக்கிய நற்செய்திப்
பகுதியை விளக்கினார்.
இயேசு தமது சிலுவைப்பாடுகளுக்கு முன்னர் கெத்செமேனியில்
அனுபவித்த பயத்தையும் ஏக்கத்தையும் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்தப் பயங்கரமான
புயல் இந்த அண்டத்தைச் சார்ந்தது அல்ல, மாறாக ஆன்மீகம் சார்ந்தது என்றார்.
எனினும்
அவ்வேளையில் இயேசு தந்தையாம் கடவுளின் வல்லமையையும் அவரது பிரசன்னத்தையும் சந்தேகிக்கவில்லை
என்றுரைத்த அவர், ஐந்து காய வரம் பெற்ற பாத்ரே பியோவும் இயேசுவின் இந்த பாடுகள் அனுபவத்தை
வாழ்ந்தவர் மற்றும் இது, சிலுவையில் அறையுண்டு உயிர்த்த கிறிஸ்துவோடு அவரை மிகவும் நெருக்கமாகக்
கொண்டு வந்தது எனவும் விளக்கினார்.
பாத்ரே பியோவின் மறைப்பணியை, அவர் ஆன்மாக்களை
வழிநடத்தியவர், துன்பங்களை மீண்டும் வாழ்ந்தவர் என்ற இரண்டிற்குள் உள்ளடக்கலாம் என்றுரைத்த
திருத்தந்தை, நீங்கள் அனைவரும் அவர் விட்டுச் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார்.
தூய்மையான வாழ்வு, செபம், பிறரன்புச் செயல்கள் மூலமாக புனித பாத்ரே
பியோ அனைவருக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார் என்று கூறிய அவர், நீங்கள் உங்கள்
பணிகளைச் செய்யும் பொழுது உண்மையாகவே தேவைப்படும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற கிறிஸ்துவுக்குச்
செவிமடுப்பதைப் புறக்கணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகிறீர்கள் என்றார்.
இச்சமயங்களில்
புனித பாத்ரே பியோவைப் பின்பற்றுங்கள் என்றும் விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட்.
கப்புச்சின் துறவு சபைத் துறவியாகிய புனித பாத்ரே பியோ 1968ம் ஆண்டில்
இறந்தார்.