2009-06-20 12:16:12

ஆண்டின் 12 ஆவது ஞாயிறு . மறையுரை . 200609 .


இயேசு நோய்களைப் போக்கினார் . பேய்களை விரட்டினார் . இறந்தவரை எழுப்பினார் . காற்றையும் கடலையும் படைத்தவரே அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் பெற்றிருந்தார் என்பதை இன்றைய புதுமை நிரூபிக்கிறது . அவர் வழியாகவே அனைத்தும் உண்டாயின . உண்டானது எதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை என்ற அருள் வாக்குக்குச் சான்றாக அமைகின்றது புயலை அடக்கும் புதுமை .



புயலில் சிக்கிய சீடர்கள் .

ஏரிக்கரையில் பேதுருவின் படகில் அமர்ந்தே ஆண்டவர் போதித்தார் . போதனை முடிந்ததும் அப்படகிலேயே தனிமையைத் தேடி அக்கரைக்குப் பயணமானார் . இருட்டத் தொடங்கியது . போதனைக் களைப்பால் படகின் பின்னணியத்தில் கட்டையையே தலையணையாகக் கொண்டு இயேசு தூங்கினார் அவரும் பசி தாகம் களைப்பு இளைப்பாற்றி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மனிதன்தானே .

மலைகளால் சூழப்பட்ட கலிலேயக் கடலில் திடீர்புயல் எழுவது இயல்பு . அன்று கடுமையான புயல் , கடல் அனுபவமுள்ள சீடர்களே தடுமாறினர் . இயேசுவோ அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார் . என் தலைவா கிளர்ந்தெழும் , ஏன் உறங்குகின்றீர் . விழித்தெழும் . எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும் என்ற திருப்பாடலை அவர்கள் நினைவு கூர்ந்திருக்கவேண்டும் . எனவே ஆண்டவரை அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் எழுப்பினர் . பல்வேறு மக்களின் துயர் துடைத்த இத்தூயவர் தமக்கும் உதவுவார் என்ற நம்பிக்கையில் எழுப்பினர் .தம்மால் ஆனமட்டும் முயன்றும் முடியாத நிலையில் அவரை எழுப்பினர் . அவர்களது செயலில் ஆண்டவர் குறைகாணவில்லை . நம்மால் ஒன்றும் இயலாத நிலையில் அவரிடம்தான் சரண் அடையவேண்டும் .எனினும் போதகரே மடிந்து போகின்றோமே , உமக்கு அக்கறையில்லையா என்ற அவர்களது கூற்று அவர்களின் விசுவாசக் குறைவைக் காட்டியது . எனவேதான் அற்ப விசுவாசமுள்ளவர்களே . நாம் இருக்கப் பயமேன் . என்று அவர்களைக் கடிந்து கொள்ளுகிறார் . நமது உலகத் தொல்லைகளுக்கிடையில் மனக்குழப்பத்தின் மத்தியில் தீய சக்திகள் நம்மை விழுங்கிவிட முயலும்பொழுது ஆண்டவரிடம் செல்வோம் .



இயேசுவின் ஆற்றல்



ஆண்டவரின் ஆற்றலைச் சுட்டிக்காட்டி இறைபுகழ் இசைக்கின்றது திருப்பாடல் . படைகளின் கடவுளாகிய ஆண்டவரே , உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார் . கொந்தளிக்கும் கடல்மீது ஆட்சி செலுத்துகின்றீர் . பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர் . 89 , 8-9 . கடலைப்படைத்த தெய்வத் திருமகன் தான் காற்றைக் கடிந்து கடலை நோக்கி இரையாதே . சும்மாயிரு என்றார் . சீடர்களின் மனக் கொந்தளிப்பும் மறைந்தது . மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன் . எங்கிருந்து எனக்கு உதவி வரும் . விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும் . அவர் உம் கால்கள் இடறாதபடி பார்த்துக் கொள்வார் . உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார் . தி.பா.121 .



சீடர்கள் இப்புதுமையால் இயேசுவின் ஆற்றலை உணர்கின்றனர் . காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே . இவர் யாராயிருக்கலாம் . என்று வினாக்களை வியப்புடன் எழுப்புகின்றனர் . சிறிது சிறிதாக இப்புதுமைகள் வழியே இறை இயேசுவில் சீடர்களின் விசுவாசம் வளர்கிறது . ஒவ்வொரு புதுமையும் நமது விசுவாசத்தை வளர்க்கும் கருவியாக உள்ளதா.



பேதுருவாகிய பாறையை அடிக்கல்லாக அமைத்து நாசரூத்தூர் நாயகன் தெய்வத் தச்சனால் உருவாக்கப்பட்ட திருச்சபையை பக்தர்கள் படகாக உருவகித்துள்ளனர் . வேதகலாபனை இத்திருச்சபையை அழிக்க எழுந்தபோதெல்லாம் அன்று கடலிலே சிக்கிய படகுபோல இத்திருச்சபையும் துன்பப்பட்டது உண்மை . எனினும் ஆண்டவர் அயர்வதுமில்லை . உறங்குவதுமில்லை . என்ற வேதவாக்கு பொய்த்துவிடவில்லை . ஆண்டவர் உறங்கினாலும் சரி , விழித்திருந்தாலும் சரி நம்முடன் இருந்தாலே போதும் . அவரே நமது அரண் .



இந்நாளில் நாம் தந்தையர்களின் விழாவையும் கொண்டாடுகின்றோம் . தன் குடிப்பெருமையை ஓங்கச் செய்வதற்குத் தளர்ச்சி கொள்ளாமல் ஒருவன் முயலும் பெருமையைப் போல மேன்மையுடையது வேறு ஒன்றும் இல்லை . அவ்வாறு தன் குடும்பத்தை உயர்வடையச் செய்வேன் என முயற்சி செய்பவனுக்குக் கடவுள் துணை செய்ய ஓடோடிவருவார் .



செபிப்போமா – தந்தையே இறைவா , வாழ்க்கையில் நாங்கள் புயல்களைச் சந்திக்கும்போது உம் திருமகன் இயேசு எம்மோடு இருக்கிறார் என்பதை நாங்கள் உறுதியோடு நம்ப அருள்தாரும் . மீண்டும் அவரது குரல் அமைதியாக இரு . இரையாதே எனக்கூறுவதைக் கேட்கவும் , எங்கள் வாழ்விலும் இவ்வுலகிலும் நாங்கள் அமைதியைக் காண அருள்தாரும் .








All the contents on this site are copyrighted ©.