2009-06-19 16:37:38

வன்முறை, அடக்குமுறை, மோதல்கள் ஆகியவற்றால் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ள இலட்சக்கணக்கான மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்க ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


சூன்19,2009. வன்முறை, அடக்குமுறை, மோதல்கள் ஆகியவற்றால் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ள இலட்சக்கணக்கான மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்குமாறு உலகினருக்கு அழைப்புவிடுத்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

உண்மையான மக்கள், உண்மையான தேவைகள் என்ற தலைப்பில் இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் உலக அகதிகள் தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர், எவ்வளவு அகதிகள் தங்கள் நாடுகளை இழந்துள்ளனர், எவ்வளவு தூரம் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகி்ன்றன என்பதை விளக்கியுள்ளார்.

குடியிருப்பு, நலவாழ்வு, கல்வி, உணவு, சுத்தமான குடிநீர், வன்முறை மற்றும் பலாத்காரம் ஆகியவற்றினின்று பாதுகாப்பு போன்றவைகள் கிடைப்பதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அவரின் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

வன்முறை, அடக்குமுறை, மோதல்கள் ஆகியவற்றால் இடம் பெயர்ந்துள்ள மக்களுடனான ஒருமைப்பாட்டை இந்த உலக தினத்தில் தெரிவிப்போம் என்றும் மூன் அழைப்புவிடுத்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் அகதிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 4 கோடியே 20 இலட்சமாக இருந்ததாகவும் இவர்களில் 2 கோடியே 50 இலட்சம் பேருக்கு ஐ.நா.அகதிகளுக்கான நிறுவனம் உதவுவதாகவும் ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.