2009-06-18 16:07:07

திருத்தந்தை : புனித ஜான் மரிய வியான்னி குருத்துவப் பணிக்கு எடுத்துக்காட்டு


சூன்18,2009. சர்வதேச குருக்கள் ஆண்டு, இன்றைய உலகில் குருக்கள் நற்செய்திக்கு மிகவும் உறுதியுடனும் தெளிவாகவும் சாட்சி சொல்வதற்கென உள்ளார்ந்த புதுப்பித்தலை ஊக்குவிக்கும் உதவும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இயேசுவின் திருஇதய பெருவிழா, குருக்களின் புனிதத்துவத்திற்கான செப நாள், புனித ஜான் மரிய வியான்னி இறந்ததன் 150ம் ஆண்டு ஆகிய மூன்று தினங்களும் சிறப்பிக்கப்படும் இவ்வெள்ளியன்று தொடங்கும் சர்வதேச குருக்கள் ஆண்டையொட்டி உலகின் அனைத்துக் குருக்களுக்கும் திருத்தந்தை அனுப்பிய அதிகாரப்பூர்வ ஆணைக் கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

1859ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இறந்த, பங்குக் குருக்களின் பாதுகாவலராகிய ஜான் மரிய வியான்னியின் எடுத்துக்காட்டான வாழ்வை அனைத்து குருக்களும் பின்பற்றுமாறும் திருத்தந்தையின் கடிதம் வலியுறுத்துகின்றது.

புனித ஜான் மரிய வியான்னி திருநற்கருணை பேழைக்கு முன்னால் அமர்ந்து செபித்தது, திருப்பலியில் அவர் கொண்டிருந்த ஆர்வம், ஒப்புரவு அருட்சாதனத்தை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கேட்டது என அவரின் வாழ்க்கை குருக்களுக்கு மிகுந்த எடுத்துக்காட்டு எனவும் திருத்தந்தை அதில் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சபை தனது சில திருப்பணியாளர்களின் பிரமாணிக்கமற்ற வாழ்வின் பின்விளைவுகளால் துன்புற்றாலும், தங்கள் இரத்தத்தைச் சிந்துவதற்கு விருப்பமாக இருக்கும் பல நேர்த்தியான குருக்களையும் திருச்சபை கொண்டிருப்பதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஏழ்மை, கற்பு பணிவு ஆகிய நற்செய்தி அறிவுரைகள் வழியாக குருக்களின் சாட்சிய வாழ்வு மெய்ப்பிக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ள அவர், பலரின் இதயங்களையும் வாழ்வையும் மாற்றும் சக்தி வாய்ந்த இவை நம் ஆண்டவரின் இரக்கமுள்ள அன்பைப் பெறுவதற்கு உதவுகின்றது என்று கூறியுள்ளார்.

திருச்சபையில் தூய ஆவி கொண்டு வரும் புதிய வசந்தத்தில் நம்பிக்கை வைக்கவும் அதனை வரவேற்கும் முறை பற்றி அறியவும் குருக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் இவ்வெள்ளி மாலை திருப்புகழ்மாலை திருவழிபாட்டுடன் இச்சர்வதேச குருக்கள் ஆண்டை தொடங்கி வைக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்








All the contents on this site are copyrighted ©.