2009-06-17 15:55:39

புதன் பொது மறைபோதகம் – புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ்


ஜூன்17,2009. உரோம் நகரை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தாலும் திருத்தந்தையின் புதன் மறைபோதகத்தைக் கேட்க வரும் கூட்டத்திற்கு மட்டும் குறைவில்லை. விசுவாசிகள் பெருமெண்ணிக்கையில் இருப்பதால் வெயிலையும் பொருட்படுத்தாமல் வத்திக்கான் பேதுரு பசிலிக்கா வளாகத்திலேயே இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய மறைபோதகத்தில் ஐரோப்பாவின் இணை பாதுகாவலர்களான புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் பற்றி விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கிழக்கு மற்றும் மேற்கைச் சேர்ந்த ஆதிகாலக் கிறிஸ்தவ எழுத்தாளர்களைப் பற்றிய நம் மறைக்கல்வியின் தொடர்ச்சியாக இன்று சகோதரர்களான புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸ் குறித்து நோக்குவோம். இவர்கள் 9ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தெசலோனிக்காவில் பிறந்தவர்கள். திருமுழுக்கின் போது கான்ஸ்ட்டைன் என்ற பெயரைப் பெற்ற சிரில், பைசான்டைன் மன்றத்தில் கல்வி கற்று குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டு புனித மற்றும் சமயச்சார்பற்ற அறிவியலின் புகழ்மிக்க ஆசிரியராகத் திகழ்ந்தார். இவரின் சகோதரர் மிக்கேல் என்பவர் மெத்தோடியஸ் என்ற பெயரைத் தாங்கித் துறவியான போது இவரும் துறவுமட வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். கிரேமியாவில் மறைப்பணியாற்றிக் கொண்டிருந்த போது திருத்தந்தை முதலாம் கிளமெண்டின் புனிதப் பொருட்களைக் கண்டெடுத்த இவ்விரு சகோதரர்களும் மொராவியாவின் மக்களுக்குக் கிறிஸ்தவத்தைப் போதித்து அதில் வெற்றியும் கண்டனர். ஸ்லாவ் மொழிக்கான எழுத்தைக் கண்டுபிடித்த இவர்கள் தங்கள் சீடர்களின் உதவியுடன் திருவழிபாட்டு நூல்கள், விவிலியம், திருச்சபைத் தந்தையரின் எழுத்துக்கள் போன்றவைகளை மொழி பெயர்த்தனர். இதன் மூலம் ஸ்லாவ் மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்து பண்பாட்டுமயமாக்குதலுக்கானச் சிறந்ததொரு எடுத்துக்காட்டை விட்டுச் சென்றுள்ளனர்.

திருத்தந்தை 2ம் ஏட்ரியன் இவர்களை உரோம் நகரில் சந்தித்த போது இவர்களின் பணிகளுக்கு ஊக்கத்தை வழங்கினார். புனித சிரில் 869ம் ஆண்டு உரோமில் இறந்தார். மெத்தோடியஸ் பல்வேறு சித்ரவதைகளை எதிர்நோக்கினாலும் தனது மறைப்பணிகளை உறுதியுடன் தொடர்ந்தார். 885ம் ஆண்டு மெத்தோடியஸ் உயிரிழந்தாலும் அவரின் சீடர்கள் அடிமைத்தளையிலிருந்து தெய்வாதீனமாக விடுவிக்கப்பட பல்கேரியாவிலும் ருஷ் பகுதிகளிலும் நற்செய்தியை அறிவித்தனர். இச்சகோதரர்களின் பணிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக இவர்களை ஐரோப்பாவின் இணை பாதுகாவலர்களாக அறிவித்தார் திருத்தந்தை 2ம் ஜான் பவுல்.

நாமும் நம் அன்றாட வாழ்வில் நற்செய்திக்குச் சான்று பகரும் போது இச்சகோதர புனிதர்களின் உறுதியான விசுவாசத்தையும் கிறிஸ்தவ ஞானத்தையும் பின்பற்றுவோம் என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.