இந்தியாவில் கத்தோலிக்கருக்கும் இந்துக்களுக்கும் இடையேயான உறவுகளில் புதிய அத்தியாயம்
திறக்கப்பட்டுள்ளது, கர்தினால் தவ்ரான்
சூன்17,2009. இந்தியாவில் கத்தோலிக்கருக்கும் இந்துக்களுக்கும் இடையேயான உறவுகளில் புதிய
அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால்
ஜான் லூயி தவ்ரான் கூறினார்.
மும்பையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற கத்தோலிக்க
மற்றும் இந்து மதத்தின் உயர்மட்ட அளவிலான உரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்
வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் தவ்ரான், கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்த
சபையினர் இவர்களுக்கு இடயேயான வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது நமது இந்துமத நண்பர்களுக்கு
மிகவும் கடினமாகவே இருக்கின்றது என்றார்.
ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிராக நடத்தப்பட்ட
வன்முறையினால் ஏற்பட்ட துயரங்கள் குறித்துத் தாங்களும் கவலை அடைவதாக இவ்வுரையாடலில் கலந்து
கொண்ட இந்துசமயப் பிரதிநிதிகள் கூறியதாகவும் கர்தினால் தெரிவித்தார்.
தங்கள்
நாட்டினர் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் விரும்புபவர்கள் என்றும் அவர்கள் உரைத்ததாகக்
கூறிய கர்தினால் தவ்ரான், இந்திய சமுதாயத்தின் நல்லிணக்க வாழ்விற்கு அனைத்து மதத்தினரும்
ஒருவரையொருவர் மதிப்பது இன்றியமையாதது என்பதை அக்கூட்டத்தினர் வலியுறுத்தியதாகவும் கூறினார்.
கடந்த
ஆகஸ்டில் ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிராகத் தொடங்கிய வன்முறைக்கான காரணத்தை அறியும் நோக்கத்தில்
இவ்வுரையாடல் கூட்டத்திற்கு ஒழுங்கு செய்தார் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர்
கர்தினால் தவ்ரான்.
இம்மாதம் 12, 13 தேதிகளில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஸ்ரீ ஜெயந்திர
சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் இந்து மதப் பிரதிநிதிகள் 12 பேர் கலந்து கொண்டனர்.