2009-06-16 12:41:22

விவிலியத்தேடல் நிகழ்ச்சி . காணாமல் போன மகன் உவமை .

தூய லூக்கா நற்செய்தி 15, 11- 32 . 160609


இந்த உவமையில் இரண்டு பகுதிகள் உள்ளன . 11-24 வசனங்களில் - முதல் பகுதியில் கடவுள் மகிழ்ச்சியோடு பாவியை வரவேற்பதை விளக்குகிறது . அடுத்த பகுதியில் 25-32 ல் கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் தங்களை உத்தமர்கள் என்று நினைக்கிறவர்கள் விமர்சிப்பதையும் காட்டுகிறது . இந்தக் கதையை நல்ல தந்தையின் கதை என நாம் கூறலாம் .



இளைய மகன் வீட்டைவிட்டுக் கிளம்பியதால் கெட்டவன் என நாம் என்னத்தேவையில்லை . தனது சொத்தைத் தருமாறு கேட்பது அந்தக் கலாச்சாரத்தில் தவறானதல்ல . இளையவன் வாழ்வில் முற்போக்குச் சிந்தனையோடு எதையாவது சாதிக்க நினைத்தான் . அவனது நம்பிக்கையோடு எதிர்பார்ப்போடு மன உறுதியும் கொண்டிருந்தான் . ஆனால் அவன் மட்டும்தான் அவன் வாழ்வில் மையமாக இருந்து கொண்டிருந்தான் . அப்பா சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் என்றான் . அவன் தன் புத்தியையே நம்பி இந்தச் செயலில் இவ்வாறு செய்தான் . அவன் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் , சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று எண்ணினான் . ஆனால் வாழ்வில் வெற்றி என்றால் என்ன , சுதந்திரம் என்றால் என்ன என்று அவனுக்குச் சரியாகப் புலப்படவில்லை .

நெஞ்சில் செருக்குடையவனாக இருந்தான் . தந்தை இறுதியில் மூத்த மகனின் விமர்சனத்தை மறுக்கவில்லை . ஆசாபாசம் என்பது பல வகைப்பட்டது . புகழ் , பொருட்செல்வம் , மற்றோருடைய பாராட்டுக்கள் , கலையில் அளவுக்கு அதிகமான மோகம் போன்றவையெல்லாம் ஆசாபாசத்தில் அடங்கும் . அங்கு வாழ்க்கை மதிப்பீடுகளும் தரமும் சீரழிகின்றன .

முடிவு – பஞ்சம் உண்டாகிறது . மனிதனின் உலகோதயப் பேராசை காரணமாக பஞ்சம் உண்டாகிறது . உண்ண உணவில்லாததால் அவன் மனம் மாறியதை நாம் தவறாகக் கருத்தக்கூடாது . ஒருவேளை எல்லா மனமாற்றங்களுமே வாழ்வில் அடிபட்டுக் காயப்பட்ட பிறகே பட்டறிவைத் தருவதாக மன மாற்றம் தருவதாக இருக்கிறது . பல புனிதர்களும் ஞானிகளும் பாவச் சேற்றில் புதையுண்ட போதுதான் ஆண்டவன் கருணையால் மனமாற்றம் பெற்று புண்ணிய வாழ்க்கையைத் தேர்ந்து கொண்டார்கள் . போர்களும் பொருளாதார இழப்பும் வரும்போதுதான் ஞானம் பிறக்கிறது . ஆனால் சிலர் அந்நிலையிலும்கூட மனமாற்றம் பெருவதில்லை .

இளையவன் வெட்கத்துத்துக்குத் தள்ளப்பட்டான் . பசிக்கிரக்கமும் வாட்டிவதைத்தது . பன்றிகளை மேய்ப்பது யூதகுலத்துக்கும் சரி நமக்கும் சரி கலாச்சாரத்தில் ஒரு தாழ்ந்த வேலையாகக் கருதப்படுகிறது . அதிலும் பன்றிகள் தின்னும் நெற்றையும் கழிவையும் உண்பது அவனுக்கு மிகப்பெரிய அவமானமாகத் தெரிந்தது . இந்நிலையில்தான் தன் தந்தைக்கு எதிராகப்புரிந்த குற்றம் அவனுக்குப் புலப்பட்டது . பல்வேறு காரணங்களால் அவன் மனம் மாறினான் . அவன் மயக்கத்திலிருந்து தெளிவடைந்தான் . உண்மையைப் புரிந்து கொண்டான் . ஊரையும் உலகையும் புரிந்துகொண்டான் . அவனது பசியை மட்டுமல்ல , தன் தாழ்ந்த நிலையையும் உணர்ந்து கொண்டான் .

அவன் திரும்பிவந்த நிகழ்ச்சி மிக்க மகிழ்ச்சிகரமானது . நாம் மகிழ்ந்து கொண்டாடவில்லையென்றால் அழுகைதான் வந்திருக்கும் . அவன் தொலைவில் வந்தபோதே தந்தைக்கு மகனின் சாயல் புரிந்துவிட்டது . அன்பு கொண்ட கண்களின் பார்வையை மறைக்கமுடியாது . மகன் மனப்பாடமாக ஒப்பித்த மன்னிப்பு மந்திரத்தை தந்தை செவிமடுத்ததாகத் தெரியவில்லை . மகிழ்ச்சிக்கடலில் தந்தையும் மகனும் மூழ்கிவிட்டார்கள் . விலையுயர்ந்த புத்தாடை பூட்டி புதுப் பொலிவோடு மகனைச் சீராட்டினார் . பளபளக்கும் மோதிரமும் , கவினுறு காலணியும் அழகு சேர்த்தன . அவனை மகன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தினார் .

ஒரு புத்தமதக் கதை ஒன்று 25 ஆண்டுகளாக மகனை மாறுவேடத்தில் சோதித்த தந்தையைப்பற்றியும் முடிவில் அந்த மகன் நல்லவன் எனத் தெரிந்ததும் பாராட்டியதும் கூறப்படுகிறது . ஆனால் நம் கதையில் வரும் ஊதாரித்தந்தை அப்படிப்பட்டவர் அல்லர் . மகனைச் சோதனைச் சாவடியில் போடவில்லை . அவருடைய மகன் இறந்துபோயிருந்தான் . உடல் இறப்பது உலகுக்கு மீண்டும் திரும்ப முடியாத நிலைக்குப்போவதால் பெரும் அச்சத்தையும் கவலையையும் தருகிறது . ஆனால் பாவம் காரணமாக ஆன்மா இறப்பதும் மிகப்பெரிய அழிவே . மகன் இறந்திருந்தான் . இதோ உயிரோடு திரும்பி வந்துள்ளான் . ஆம் தாராளத் தந்தை அவனை மகனாக ஏற்று சிறப்புச்செய்து விருந்து கொண்டாடி மகிழ்வதைப் பார்க்கிறோம் . கடவுள் தந்தையும் இப்படிப்பட்டவரே எனவும் இந்தத் தந்தையையும் விட எவ்வளவு அன்பு செய்தார் என்றால் மனிதர்களுக்கு நிறைவாழ்வளிக்க தம் மகனையே இவ்வுலகுக்கு அனுப்பிவைத்தார் . என்னே கடவுளின் இரக்கப்பெருக்கும் பேரன்பும் .








All the contents on this site are copyrighted ©.