2009-06-16 15:21:38

பேவ் த வே அமெரிக்க அமைப்பு - திருத்தந்தை 12ம் பத்திநாதர் யூதர்களுக்கு உதவியுள்ளார்


சூன் 16,2009 நாத்ஸி வதைப்போர் காலத்தில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் யூதர்களுக்கு உதவியுள்ளது குறித்து நிறைய ஆதாரங்கள் தங்கள் கைவசம் உள்ளதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் பேவ் த வே என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நாத்ஸி வதைப்போர் காலத்தில் அதற்கு எதிராக திருத்தந்தை 12ம் பத்திநாதர் தனது குரலை எழுப்பவில்லையென சில குழுக்களால் குற்றம் சாட்டப்பட்டுவரும் வேளையில் யூதர் ஒருவரைத் தலைவராகக் கொண்ட இவ்வமைப்பு அத்திருத்தந்தையின் யூத ஆதரவு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை 12ம் பத்திநாதர் நாத்ஸி படுகொலைகளிலிருந்து யூதர்களைக் காப்பாற்றியது குறித்து 2300 பக்க ஆதாரங்கள் உள்ளதாகக் கூறினார் பேவ் த வே அமைப்பின் தலைவர் காரி குரூப்.

யூதர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவிய ஒரு திருத்தந்தையை யூதவிரோதப் போக்காளராகவும் ஹிட்லருக்குப் பயந்தவராகவும் சித்தரிக்க முயன்றது, இரஷ்ய உளவுப்படையின் கத்தோலிக்கவிரோதப் போக்கின் வெளிப்பாடு எனவும் குற்றம்சாட்டினார் குரூப்.

வரலாற்று ஆசிரியர்கள் பலரும்கூட இதில் தவறிழைத்திருக்கிறார்கள் எனத் தன் கவலையை வெளியிட்ட யூதரான குரூப், அனைத்து ஆதாரங்களும் இணையதளத்தில் வெளியிட்ப்படும் எனவும் அறிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.