2009-06-16 15:23:48

தற்போதைய பொருளாதார அமைப்பு முறை, இவ்வுலகின் வளங்கள் சமமாகப் பங்கிடப்படும் அமைப்பு முறையாக மாற்றுமாறு பிரான்சிஸ்கன் துறவியர் பணக்கார அழைப்பு


சூன்16,2009 தற்போதைய பொருளாதார அமைப்பு முறையை, இன்னும் உறுதியான மற்றும் இவ்வுலகின் வளங்கள் இன்னும் அதிகச் சமமாகப் பங்கிடப்படும் அமைப்பு முறையாக மாற்றுமாறு உலகின் பணக்கார நாடுகளைக் கேட்டுள்ளனர் பிரான்சிஸ்கன் சபைத் துறவியர்.

தென் இத்தாலியில் கூட்டம் நடத்திய அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, இரஷ்யா ஆகிய ஜி8 என்ற தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகளின் நிதி அமைச்சர்களுக்கு இவ்வழைப்பை முன்வைத்தனர் இத்துறவு சபையினர்.

பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிப்பதற்கான நாடுகளின் முயற்சிகளில் சுற்றுச்சூழலைக் குறைவாகவே மாசுபடுத்தும் மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை வகுக்குமாறும் இத்துறவு சபையின் அறிக்கை அழைப்புவிடுத்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை மேற்கொள்ள வேண்டுமானால், தனிப்பட்டவர்கள் மிதமான மற்றும் பொறுப்பான வாழ்க்கை முறையைத் தேர்ந்து கொள்வது அவசியம் என்றும் அவ்வறிக்கை கூறியது.

சுற்றுச்சூழலை மதிக்கின்ற, அஹிம்சா வழிகளில் செயல்படுகின்ற மற்றும் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கை முறையை தனியாட்கள் அமைப்பது அவசியம் எனவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.

புனித பிரான்சிஸ் பிறந்த அசிசியில் பிரான்சிஸ்கன் துறவு சபையின் சுமார் 152 பிரதிநிதிகள் மே 24 முதல் சூன் 20 வரை அச்சபையின் பொது அவையில் கலந்து கொள்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.