2009-06-15 15:04:57

எல்லாப் பொருட்களும் மேலானதை நோக்கி மாற முடியும், திருத்தந்தை


சூன்15,2009. கிறிஸ்துவில் அன்பு குடிகொண்டிருப்பதாலும் இவ்வன்பு அனைத்திலும் நிலைத்திருப்பதாலும் எல்லாப் பொருட்களும் மேலானதை நோக்கி மாற முடியும் மற்றும் அவ்வாறு மாறும் என நாம் நம்பலாம் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வத்திக்கான் புனித இராயப்பர் பேராலய பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையைக் கேட்பதற்காகக் கூடியிருந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்ட்ட கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்த பெருவிழா பற்றிய சிந்தனைகளை வழங்கிய போது இவ்வாறு கூறினார் அவர்.

இப்பெருவிழா, கடவுள் அன்பானவர் என்பதை நிரூபிக்கும் அவரின் வெளிப்பாடாகும் என்ற திருத்தந்தை, இறையன்பு என்றால் என்ன, அது என்ன செய்கின்றது என்பது பற்றி இப்பெருவிழா தனிப்பட்ட மற்றும் சிறப்பான விதத்தில் நமக்கு விளக்குகிறது என்று கூறினார்.

இப்பெருவிழாவின் அண்டசராசரக் கூறு பற்றியும் விளக்கிய திருத்தந்தை, இப்பெருவிழா நாள், வானகம் மற்றும் வையகத்தை உள்ளடக்கிய அண்டசராசரக் கூற்றை ஈடுபடுத்துகிறது என்றார்.

நமது பூமிப்பந்தில் இந்த வசந்த காலம் கொண்டு வரும் அழகான மற்றும் மணமிக்க காலத்தில், வெயில் கடுமையாக இருக்கிறது, வயல்களில் அறுவடைகள் தயாராக இருக்கின்றன என்பதை முதலில் இது நமக்கு நினைவுக்குக் கொண்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

எபிரேய மரபுப்படி திருச்சபையின் விழாக்கள், விதைப்பு மற்றும் அறுவடையோடு தொடர்புடைய சூரிய ஆண்டோடு தொடர்புடையன, இது, இன்றையப் பெருவிழாவில், அதுவும் வானக மற்றும் வையகத்தின் கனியாகிய அப்பத்தை மையமாகக் கொண்ட இப்பெருவிழாவில் மிகவும் உண்மையாகிறது என்று கூறினார் திருத்தந்தை.

எனவேதான் இந்தத் திருநற்கருணை அப்பம், விண்ணிலும் மண்ணிலுமிருக்கின்ற கிறிஸ்துவின் காணக்கூடிய அடையாளமாக இருக்கின்றது, கடவுளும் மனிதனும் ஒன்றானார்கள், இதுவே காலங்களுக்கும் திருவழிபாட்டு ஆண்டுக்கும் இடையேயான பிணைப்பு வெறும் புறத்தோற்ற இயல்பு மட்டுமல்ல என்பதைக் காட்டுகிறது என்றும் மூவேளை செப உரையில் விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இன்னும், இச்செப உரையின் இறுதியில், திருத்தந்தை, நாம் இன்று சிறப்பிக்கும் நித்திய வாழ்வின் திருஅப்ப விழாவை, உலகில் பசியால் வாடும் இலட்சக்கணக்கான மக்களோடு தொடர்புபடுத்திப் பேசினார். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.