2009-06-13 15:05:45

திருத்தந்தையின் புதிய அப்போஸ்தலிக்கச் சுற்றுமடல் பொருளாதாரம் மற்றும் வேலை பற்றி எடுத்துரைக்கும்


சூன்13,2009. பொருளாதாரம் மற்றும் வேலை பற்றித் தான் வெளியிடவுள்ள அப்போஸ்தலிக்கச் சுற்றுமடல், உண்மையிலேயே சுதந்திரமும் உறுதியும் கொண்ட மனிதனின் ஒருங்கிணைந்த வாழ்வுக்கு உதவும் விழுமியங்களை வழங்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

சென்த்தேசிமுஸ் ஆனுஸ் புரோ போந்திபிசெ என்ற பாப்பிறை நிறுவனத்தின் ஏறத்தாழ 300 பேரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் சோர்வின்றி பின்பற்றுவதற்கும் பேணி பாதுகாத்து வளர்ப்பதற்குமான கூறுகளைத் தனது சுற்றுமடல் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொழிற் வளர்ச்சியடைந்த நாடுகளையும் பாதித்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, தேவையில் இருப்போர் மற்றும் நலிந்தோரின் உரிமைகளை மதிப்பதாய் நவீன பொருளாதாரம் அமையவதாய் இந்நிறுவனத்தினரின் சிந்தனைகள் இருக்க வேண்டுமெனவும் கூறினார்.

CAPP எனப்படும் Centesimus Annus Pro Pontifice என்ற பாப்பிறை நிறுவனமானது, கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகப் போதனைகளை, குறிப்பாக திருத்தந்தை 2ம் ஜான் பவுல் வெளியிட்ட நூறாவது ஆண்டு எனப்படும் சென்த்தேசிமுஸ் ஆனுஸ் என்ற அப்போஸ்தலிக்கச் சுற்றுமடலின் போதனைகளை நன்கு அறிவிப்பதற்கென 1991ம் ஆண்டு மே ஒன்றாந் தேதி உருவாக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள், “வளர்ச்சியின் புதிய வடிவத்திற்கான மதிப்பீடுகளும் ஒழுங்குகளும்” என்ற தலைப்பில் உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைகழகத்தில் இரண்டு நாள் மாநாட்டை இவ்வெள்ளியும் சனிக்கிழமையும் நடத்தினர்.








All the contents on this site are copyrighted ©.