2009-06-13 18:00:49

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா .மறையுரை .1406


நற்செய்தி வாசகம் . இன்றைய நற்செய்தியை நமக்கு வழங்குவது தூய மாற்கு .

அதிகாரம் 14 , 12-16 , 22-26 .

இறைவன் தன் படைப்பில் எங்கும் பிரசன்னமாக இருக்கிறார் . தன் சாயலாகப் படைத்த மனிதனில் சிறப்பான வகையில் குடி கொண்டுள்ளார் தெய்வத்திருமகன் . மனித இயல்பைத் தனதாக்கிக் கொண்டு , இயேசுவில் கடவுள் மனிதரானார் . அதே இயேசு தன் மரணத்திற்கு முன்னர் சாதாரண அப்பத்தையும் . இரசத்தையும் தன் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றி நமது ஆன்மீக உணவாகின்றார் . நாம் செலுத்த வேண்டிய அன்றாடப் பலியாகின்றார் . இதையே இன்றைய நற்செய்தி நவில்கின்றது .



பாஸ்கா விழா .

இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டில் கொத்தடிமைகளாக வாழ்ந்தனர் . தம்மை மீட்கும்படி தம் காப்புக் கடவுளை இறைஞ்சினர் . அவர்களது மன்றாட்டு கேட்கப்பட்டது . இரத்தம் பூசப்பட்டிருந்த இஸ்ராயேல் வீட்டுத் தலைச்சன்களை அழிக்காது மரணதேவன் அவர்கள் வீட்டைக் கடந்து சென்று , எகிப்தியக் குடும்பங்களின் தலைச்சன்களைக் கொல்லும்படி செய்தார் கடவுள் . பாஸ்கா என்றாலே கடந்து செல்லுதல் என்பது பொருள் . இம்மீட்புப்பணியை நினைவு கூர்ந்து இறைவனுக்கு நன்றிகூற ஏற்படுத்தப்பட்ட விழாவே பாஸ்கா விழா . இதைக் கொண்டாட வேண்டிய முறை விடுதலைப் பயணத்தில் கூறப்பட்டுள்ளது . 12 , 1-28 .இயேசுவும் இஸ்ராயேல் மகன் என்ற முறையில் சீடர்களுடன் எருசலேமில் இவ்விழாவைக் கொண்டாடினார் . குறிப்பிட்ட உணவுப் பொருள்களை உண்பதுடன் இறைபுகழ் பாடுவதே இவ்விருந்தின் சிறப்பான அம்சமாகும் . இறைவன் தம்முடன் உடன்படிக்கை செய்து கொண்டதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும் .மோசே தலைமையில் எகிப்திலிருந்து தப்பி வந்த எகிப்தியரைப் பொங்கி எழுந்து அழித்ததை நன்றியுடன் நினைவுகூர வேண்டும் . இதையே இயேசுவும் தம் இறுதி இராவுணவு வேளையில் செய்தார் .



பரிசுத்த பரம திவ்ய நற்கருணை .



இறுதி இராவுணவு வேளையில் இயேசு இறுதியுரையாற்றினார் . இயேசுவின் இறுதியுரையைக் கேட்ட சீடர்கள் கண்கலங்கினர் . அவர்களை அனாதைகளாகத் தான் விட்டுச் செல்ல மாட்டேன் என்றார் . மோசேயின் வழக்கத்திற்கு மாறான ஒன்றும் அங்கு நடந்தது . ஆண்டவர் அங்கிருந்த அப்பத்தை எடுத்தார் . கண்களை மேலே உயர்த்தினார் . இறைபுகழ் கூறினார் . இது என் உடல் , இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார் .அதேபோல இரசக் கிண்ணத்தையும் எடுத்து நன்றி கூறி உடன்படிக்கைக்கென பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம் இது என்றார் . திபேரியக் கடற்கரையில் அப்பத்தைப் பலுகச் செய்து ஐயாயிரம் பேரின் பசி போக்கினார் மனுமகன் . இங்கு அப்பத்தைத் தன் உடலாக, இரசத்தைத் தன் இரத்தமாக மாற்றி நமக்கு அளிக்கின்றார் . பிள்ளை பசித்திடப் பெற்ற தாய் தன் சதையைத் தந்திடல் எங்குமுண்டோ . நற்கருணையில் தெய்வத்திருமகன் அப்பத்தின் வடிவத்திலே – வண்ணத்திலே – குணத்திலே நிறைந்து மறைந்து நம்மிடம் வருகின்றார் .



கிண்ணத்தில் பருகுதல் ஒருவன் மற்றவனோடு கொள்ளும் உறவைக் குறிக்கும் . இயேசுவின் உடலை உண்டு இரத்தத்தைப் பருகும்பொழுது நாம் அவருடன் இணைகின்றோம் . நற்கருணை உணவு மட்டுமன்று . பலியாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது . வேற்றுப் பொருளை வெறுமையென ஒதுக்கி , தன் உடலையே பலிப்பொருளாகக் கொண்டு , தானே குருவாக நின்று தன்னைப் பலியிட்டு , புதிய உடன்படிக்கையைத் தன் இரத்தத்தால் எழுதினார் இயேசு . இக்கல்வாரிப் பலி அன்றோடு முடிந்துவிடாது , என்றும் நிலைத்திருக்கவே தனது இறுதியுணவு வேளையில் அப்ப இரச வடிவில் புதுப்பலியை ஒப்புக்கொடுக்க கட்டளையிட்டார் . நற்கருணை நமது பலி . நமது உணவு . நாம் உண்ணும் உணவு நமது உடலாக மாறுகிறது . நற்கருணை என்ற நல்லமுதோ நம்மை இயேசுவாக மாற்றுகிறது . மாற்றவேண்டும் . அவரது அன்பும் தியாகமும் அருள் இரக்கமும் பொறுமையும் மன்னிக்கும் மனப்பான்மையும் நமதாக வேண்டும் . இனி வாழ்பவன் நானல்ல , என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே என வாழ முயல்வோம் . நற்கருணை வழியாக நாம் இயேசுவை நம் உள்ளத்தில் பெறுகிறோமென்றால் நம் வாழ்வில் நம்மைச் சந்திப்பவர்களுக்கு அவர் தெளிவாகப் பிரசன்னமாகத் தெரியவேண்டும் . நம்மில் அவர்கள் தேவனைக் காணவேண்டும் .



இந்த நற்கருணை விருந்தின் வழியாக நாம் நலமாக வாழ்ந்து ஒருநாள் முடிவில்லா வாழ்வில் பங்கேற்பதற்கு வரம் கேட்போம் .








All the contents on this site are copyrighted ©.