2009-06-12 14:25:44

இலங்கையின் 25 வருட உள்நாட்டுப் போரில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அரசு ஒருபொழுதும் முக்கியத்துவம் கொடுத்து புலன்விசாரணை நடத்தவில்லை, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்


சூன்12, 2009. இலங்கையின் 25 வருட உள்நாட்டுப் போரில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அரசு ஒருபொழுதும் முக்கியத்துவம் கொடுத்து புலன்விசாரணை நடத்தவில்லை என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமைகள் கழகம் குறை கூறியது.

இலண்டனை மையமாகக் கொண்ட இக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்துள்ள இவ்வேளையில் இலங்கை அரசு அதன் நீதித்துறையை விரைவாகச் சீர்படுத்தி நாட்டில் அமைதியைக் கொண்டுவர வேண்டிய உடனடி தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியது.

மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்குச் சர்வதேச குழு ஒன்றை உருவாக்குமாறும் இக்கழக அறிக்கை விண்ணப்பித்துள்ளது.

மேலும், இராணுவத் தாக்குதல்கள் முடிந்த நிலையில், கடந்த மாதம் இலங்கை அரசு வழங்கிய உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐ.நா.பொதுச் செயலர் பான்கீமூனும் கோரியுள்ளார்.

இது தொடர்பாக தான் இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்புவதாகவும் பான்கீமூன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒப்புரவுக்கான முயற்சிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும், வரலாறு மீண்டும் திரும்பக்கூடாது என்ற அடிப்படையில் இலங்கை அரசு சிறுபான்மை தமிழர் மற்றும் பிறரின் விடயத்தில் இணக்கம் ஒன்றை காணவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, புலம் பெயர்ந்துள்ளோரில் 80 விழுக்காட்டினரை இந்த வருட இறுதிக்குள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவுள்ளதாக அரசு உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.