2009-06-12 14:20:39

இந்தியாவில் கத்தோலிக்கருக்கும் இந்துகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த மும்பையில் கத்தோலிக்க–இந்து உரையாடல் கூட்டம்


சூன்12, 2009. இந்தியாவில் கத்தோலிக்கருக்கும் இந்துகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தவும் நாட்டில் அமைதியை ஊக்குவிக்கவுமென திருப்பீட உயர்மட்ட குழு ஒன்று மும்பையில் கத்தோலிக்க–இந்து உரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்கின்றது.

இவ்வெள்ளியன்று தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான் தலைமையிலான எட்டுப் பேர் அடங்கிய குழு கலந்து கொள்கின்றது.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு இந்து மதம் சாரிபில் கலந்து கொள்கின்றது.

இந்த உரையாடல் கூட்டம் நடக்க ஒழுங்கு செய்த மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் இது பற்றிப் பேசுகையில், இக்கூட்டம் திருத்தந்தையின் பிரதிநிதிகளுக்கும் உயர்மட்ட இந்து மதத் தலைவர்களுக்கும் இடையே இடம் பெறும் முதல் அதிகாரப்பூர்வ வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றார்.

இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் இரு மதத்தவர்க்கிடையே நல்லிணக்கத்தையும் ஒப்புரவையும் வளர்க்கும் நோக்கத்தை இக்கூட்டம் கொண்டுள்ளது என்றும் கர்தினால் ஆஸ்வால்டு தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்டில் ஒரிசாவில் தொடங்கிய கிறிஸ்தவர்க்கெதிரான இந்து தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 90 பேர் வரை இறந்தனர் மற்றும் ஐம்பதாயிரத்துக்கு அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.








All the contents on this site are copyrighted ©.